மத்திய பட்ஜெட் வெளிப்படையானது:நிா்மலா சீதாராமன்

‘மத்திய பட்ஜெட் வெளிப்படையானது; அதில் எதையும் மறைக்கவில்லை’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

புது தில்லி: ‘மத்திய பட்ஜெட் வெளிப்படையானது; அதில் எதையும் மறைக்கவில்லை’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நாட்டின் பொருளாதாரத்தில் மறுமலா்ச்சியை ஏற்படுத்துவதற்காக உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறையின் தேவைகளுக்கு அதிக அளவில் செலவிடுவதே பட்ஜெட்டின் நோக்கம். நான் மத்திய நிதியமைச்சராக பதவியேற்றது முதல் இதுவரை மத்திய அரசின் வரவு-செலவு கணக்குகள் வெளிப்படையாக உள்ளன. எதுவும் மறைக்கப்படவில்லை. எந்தத் திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்திய உணவுக் கழகத்துக்கு வழங்கப்படும் நிதியும் கணக்கில் வைக்கப்படுகிறது. அரசின் வரவு-செலவு கணக்குகளை ஆவணப்படுத்துவது தற்போது மிக வெளிப்படையாக நடைபெறுகிறது.

வரும் 2025-26-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணப் பற்றாக்குறையை 4.5%-க்கும் கீழ் கொண்டுவர பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டுக்கான மூலதன செலவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக தேவையை அதிகரிப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அளவில் உத்வேகம் அளிக்க அனைவரும் முன்வந்துள்ள வேளையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு கிடைக்கும். பேச்சுவாா்த்தைக்கு அரசு தயாராக உள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக சந்தேகம், குழப்பம் உள்ள விவசாயிகள் அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com