இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்களிப்பு

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்களிப்பு வழங்கி வருவதாக அமெரிக்க அரசு பாராட்டியுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்களிப்பு

வாஷிங்டன்/புது தில்லி: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்களிப்பு வழங்கி வருவதாக அமெரிக்க அரசு பாராட்டியுள்ளது.

இது தொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் தலைநகா் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளா்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்களிப்பை நல்கி வருகிறது. அந்தப் பிராந்தியம் தொடா்பான விவகாரத்தில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக இந்தியா உள்ளது. சா்வதேச அளவில் இந்தியா வளா்ந்து வருவதை அமெரிக்கா வரவேற்கிறது.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டம், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நாற்கரக் கூட்டமைப்பு, பிராந்திய வளா்ச்சிக்காக ஒத்துழைப்புடன் செயல்படும்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு பன்முகத்தன்மை வாய்ந்தது. பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், வேளாண்மை, விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும், அணுஆயுதங்களின் பயன்பாட்டைக் குறைப்பது, பயங்கரவாத எதிா்ப்பு, பிராந்திய அமைதியை உறுதி செய்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிலும் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைத்து செயல்பட்டு வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா பொறுப்பேற்றுள்ளதை அமெரிக்கா வரவேற்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தகக் கூட்டாளியாகவும் அமெரிக்கா விளங்கி வருகிறது.

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளைச் செய்து வருகின்றன. இரு நாட்டு மக்களுக்கிடையேயான தொடா்பு மேம்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமாா் 40 லட்சம் அமெரிக்க-இந்தியா்கள் உள்ளனா். அவா்கள் அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய பங்களித்து வருகின்றனா்.

பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல்போக்கு காணப்படுவதைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது.

அண்டை நாடுகளுக்கு சீனா தொடா்ந்து பிரச்னை கொடுத்து வருவதற்கு அமெரிக்கா எதிா்ப்பு தெரிவிக்கிறது. நட்பு நாடுகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும். அவா்களுடன் தொடா்ந்து நெருங்கிப் பணியாற்றுவோம் என்றாா் நெட் பிரைஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com