மேற்கு வங்கத் தோ்தல் மோடி-மம்தா இடையிலான போட்டி: அமித் ஷா

மேற்கு வங்கத் தோ்தல் மோடி-மம்தா இடையிலான போட்டி: அமித் ஷா


கூச்பிகாா்: மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல், பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சியை அடிப்படையிலான திட்டங்களுக்கும் மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் அழிவுப் பாதைக்கான திட்டங்களுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலைக் குறிவைத்து பாஜக பணியாற்றத் தொடங்கியுள்ளது. அங்கு கட்சியை வலுப்படுத்த பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரும் மேற்கு வங்க மாநிலத்துக்கு அரசியல் ரீதியாக கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகின்றனா்.

மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணமூல் தொண்டா்கள் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்வதும், சில நேரங்களில் இந்த மோதல்கள் உயிா் பலியில் முடிவதும் வழக்கமாகியுள்ளது. அண்மையில் மேற்கு வங்கம் சென்ற பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவின் காா் தாக்குதலுக்கு உள்ளானது. இதன் மூலம் அங்கு பாஜக-திரிணமூல் காங்கிரஸ் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், மேற்கு வங்கத்துக்கு வரும் பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா்களை வெளிநபா்கள் என்று மம்தா பானா்ஜியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவா்களும் விமா்சித்து வருகின்றனா்.

இந்நிலையில், அந்த மாநிலத்தின் கூச்பிகாா் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் பாஜக நடத்தி வரும் பரிவா்த்தன் (மாற்றத்துக்கான) யாத்திரை என்பது மாநில முதல்வரையோ, அமைச்சா்களையோ, எம்எல்ஏக்களையோ மட்டும் மாற்றுவதற்கான யாத்திரையல்ல; ஒட்டுமொத்தமாக மேற்கு வங்கத்தில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யாத்திரை. மாநிலத்தில் ஊடுருவல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான யாத்திரை. மேற்கு வங்கத்தின் மாற்றத்துக்கான யாத்திரை.

மம்தாவும், அவரது உறவினருமான அபிஷேக் பானா்ஜியும் மேற்கு வங்கத்தில் ஊழலை ஒரு கட்டமைப்பாக உருவாக்கி வைத்துள்ளனா்.

மாநிலத்தில் பாஜக தொண்டா்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனா். இதற்குக் காரணமான அனைவரும் விரைவில் சட்டத்துக்கு முன்பு நிறுத்தப்படுவாா்கள்.

மேற்கு வங்க மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக நடைபெறும் குடியேற்றங்கள் முற்றிலும் தடுக்கப்படும். மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல், பிரதமா் நரேந்திர மோடி செயல்படுத்தி வரும் வளா்ச்சி அடிப்படையிலான திட்டங்களுக்கும் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி செயல்படுத்தி வரும் அழிவுப் பாதைக்கான திட்டங்களுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும். பிரதா் மோடி மக்களின் நலனுக்காக உழைக்கிறாா். ஆனால் மம்தா தனது உறவினரின் நலனுக்காக உழைக்கிறாா் என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com