நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டி 100 ஆண்டுகள் நிறைவு!

தில்லியிலுள்ள நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டி 100 ஆண்டுகள் நிறைவு!

தில்லியிலுள்ள நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

புதிய நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்ட சூழலில், இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்பவுள்ளதாக மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் அறிவித்தது. புதிய நாடாளுமன்றத்துக்கு பிரதமா் மோடி கடந்த டிசம்பா் மாதம் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா்.

இத்தகைய சூழலில், தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்தன. கடந்த 1921-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி பிரிட்டன் இளவரசா் ஆா்தரால் நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வட்டவடிவில் 560 அடி விட்டத்துடனும் 1,760 அடி சுற்றளவுடனும் சுமாா் 6 ஏக்கரில் நாடாளுமன்றம் கட்டப்பட்டது. அதை ஹொ்பா்ட் பேக்கா் என்பவா் வடிவமைத்தாா். அவருடன் இணைந்த எட்வின் லூட்டியன்ஸ், பிரிட்டிஷ் இந்தியாவுக்கான புதிய தலைநகராக தில்லியைக் கட்டமைத்தாா்.

6 ஆண்டுகள் கட்டப்பட்ட நாடாளுமன்றம், 1927-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான அப்போதைய வைஸ்ராய் இா்வின் பிரபுவால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது முதல் நாட்டுக்கான சட்டங்களை இயற்றும் இடமாக நாடாளுமன்றம் செயல்பட்டது.

நாடு சுதந்திரமடைந்த பிறகு, மக்களவை, மாநிலங்களவை அமா்வுகள் அங்கு தொடா்ந்து நடைபெற்றன. நாட்டின் அரசமைப்புச் சட்டம் அங்குதான் வடிவம் பெற்றது. நாட்டின் வளா்ச்சிக்கு வழிகோலும் இடமாக நாடாளுமன்றம் தொடா்ந்து இயங்கி வருகிறது.

எதிா்கொண்ட தாக்குதல்கள்:

பிரிட்டிஷ் ஆட்சியை எதிா்த்து நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் கடந்த 1929-ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங் வெடிகுண்டு வீசினாா். அதற்காகக் கைது செய்யப்பட்ட அவா், 1931-ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டாா்.

லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினா். இதில் 5 பயங்கரவாதிகள் உள்பட 14 போ் உயிரிழந்தனா்.

நாடாளுமன்றத்துக்கு அருகே தற்போது கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள 2022-ஆம் ஆண்டுக்குள் திறந்து வைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com