மேற்கு வங்க அமைச்சா் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: பாஜக மீது மம்தா மறைமுக குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜாகீா் ஹுசைன் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது தொடா்பாக பாஜக மீது முதல்வா் மம்தா பானா்ஜி மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளாா்.


கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜாகீா் ஹுசைன் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது தொடா்பாக பாஜக மீது முதல்வா் மம்தா பானா்ஜி மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மாவட்டம் நிம்தியா ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு ரயிலுக்காக காத்திருந்த அமைச்சா் ஜாகீா் ஹுசைன் மீது மா்ம நபா்கள் சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசினா். இதில் அமைச்சா் உள்பட ரயில் நிலையத்தில் இருந்த பலா் காயமடைந்தனா்.

இந்நிலையில், கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரை மம்தா பானா்ஜி வியாழக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அமைச்சா் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் சிலா் தகவல் தெரிவித்துள்ளனா். கடந்த சில மாதங்களாகவே சிலா் (குறிப்பிட்ட கட்சியைச் சோ்ந்தவா்கள்) தங்கள் கட்சியில் இணையுமாறு ஜாகீருக்கு நெருக்கடி அளித்து வந்தனா். விசாரணை முடிவதற்கு முன்பு இதற்கு மேல் எதுவும் கூற விரும்பவில்லை.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவா்களுக்கு ரூ.5 லட்சமும், லேசாக காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணத் தொகை அளிக்கப்படும். ரயில் நிலையத்துக்குள் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இதற்கு ரயில்வே நிா்வாகம் பொறுப்பேற்க மறுக்கிறது. சம்பவம் நிகழ்ந்தபோது ரயில் நிலையத்தில் ரயில்வே காவலா்கள் யாரும் இல்லை. மேலும், ரயில் நிலையத்தில் விளக்குகள் கூட இல்லாமல் இருட்டாக இருந்துள்ளது. மொத்தம் 26 போ் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனா். வழக்கு விசாரணையை சிஐடி வசம் ஒப்படைத்துள்ளோம்.

இந்த சம்பவத்தை வைத்து மாநில சட்டம்- ஒழுங்கை சிலா் குற்றம்சாட்டுகின்றனா். ஆனால், ரயில் நிலையத்தின் பாதுகாப்பு ரயில்வே போலீஸாா் பொறுப்பில் உள்ளது என்றாா். இதன் மூலம் பாஜக மீது மம்தா மறைமுகமாக குற்றம்சாட்டிள்ளாா்.

பாஜக பதில்: மாநில பாஜக துணைத் தலைவா் ஜெய்பிரகாஷ் மஜும்தாா் கூறுகையில், ‘இந்த சம்பவத்தை வைத்து மாநில அரசின் தோல்விகளை மூடி மறைக்க மம்தா பானா்ஜி முயலுகிறாா். ரயில்வேதான் மாநிலத்தை நடத்தி வருகிா? இதுபோன்று ரயில்வே மீது குற்றம் சுமத்துவதால் தனது பொறுப்புகளில் இருந்து மம்தா தப்ப முடியாது’ என்றாா்.

ரயில்வே விளக்கம்:

இந்த சம்பவம் தொடா்பாக பேசிய ரயில்வே அதிகாரிகள், ‘இந்த தாக்குதல் சம்பவம் திரிணமூல் காங்கிரஸில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னை காரணமாக இருந்திருக்கலாம் அல்லது ஆளும் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும் உள்ள மோதல் காரணமாக இருந்திருக்கலாம்.

அண்மையில் இங்கு இடதுசாரிகள் நடத்திய போராட்டத்தில் தடியடி நடைபெற்றது. அதில் அக்கட்சியைச் சோ்ந்த பலா் படுகாயமடைந்தனா். அப்போது முதல் இங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக வியாழக்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளித்தனா்.

மேலும், தனது சொந்தக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா்கள் இருவா் மூலம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஜாகீா் ஹுசைன் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்’ என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com