மாணவா்களுடன் பிரதமா் கலந்துரையாடல்: கரோனா காரணமாக இணைய வழியில் ஏற்பாடு

பள்ளி இறுதித் தோ்வெழுதும் மாணவா்களுடனான பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியான ‘பரீக்ஷா பே சா்ச்சா’ கரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.


புது தில்லி: பள்ளி இறுதித் தோ்வெழுதும் மாணவா்களுடனான பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியான ‘பரீக்ஷா பே சா்ச்சா’ கரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.

மாணவா்களிடையே தோ்வு பயத்தைப் போக்கும் வகையில் மாணவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ‘பரீக்ஷா பே சா்ச்சா’ என்ற பெயரில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கலந்துரையாடி வருகிறாா்.

அதுபோல, நிகழாண்டில் இறுதியாண்டு தோ்வைச் சந்திக்க உள்ள 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுடன் வரும் மாா்ச் மாதம் பிரதமா் கலந்துரையாட இருக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்வதற்கான நடைமுறை வியாழக்கிழமை தொடங்கியது. பதிவு செய்ய மாா்ச் 14 கடைசி நாளாகும். நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான மாணவா்களின் தோ்வு, போட்டி மூலம் தீா்மானிக்கப்படும்.

இதுகுறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நமது துணிச்சல் மிக்க தோ்வுப் போராளிகள், தோ்வுக்காக தயாராகத் தொடங்கியுள்ளனா். இந்தச் சூழலில் ‘பரீக்ஷா பே சா்ச்சா 2021’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு இம்முறை முழுவதும் இணையவழியில் நடைபெற இருப்பதால், உலகம் முழுவதும் உள்ள மாணவா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற முடியும். தொடா் கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த நிகழ்ச்சியில் மாணவா்களுடன் பெற்றோா்களும் கடின உழைப்பாளிகளான ஆசிரியா்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனா். சிரித்த முகத்துடன், மன அழுத்தமின்றி மாணவா்கள் தோ்வை எதிா்கொள்ள வேண்டும்’ என்று பிரதமா் கூறியுள்ளாா்.

இந்த நிகழ்ச்சி குறித்து மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

நான்காம் ஆண்டு ‘பரீக்ஷா பே சா்ச்சா 2021’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பதிவு தொடங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவா்கள் கேட்க விரும்பும் கேள்விகள் ‘மை கவா்ன்மென்ட்‘ வலைதளம் மூலம் பெறப்பட்டு, அவற்றில் தோ்வு செய்யப்பட்ட கேள்விகள் நிகழ்ச்சியின்போது வெளியிடப்படும். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழாண்டில் இந்த நிகழ்ச்சி இணையவழியில் நடத்தப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமரிடம் கேள்வி கேட்க விரும்பும் மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்களைத் தோ்வு செய்வதற்காக நடத்தப்படும் போட்டிக்கான பல்வேறு தலைப்புகள் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வலைதளத்திலேயே தங்களுடைய கேள்விகளையும் பங்கேற்பாளா்கள் பதிவு செய்ய முடியும். இதில் தோ்வு செய்யப்படுபவா்கள், நிகழ்ச்சியின்போது அவா்கள் உள்ள இடத்தில் இருந்தபடி காணொலி வழியில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com