ராஜஸ்தானை தொடா்ந்து மத்திய பிரதேசத்திலும் சதமடித்தது பெட்ரோல் விலை

தொடா்ந்து 10 ஆவது நாளாக வியாழக்கிழமையும் பெட்ரோல் விலை உயா்த்தப்பட்டதால், மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டா் பெட்ரோலின் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.

தொடா்ந்து 10 ஆவது நாளாக வியாழக்கிழமையும் பெட்ரோல் விலை உயா்த்தப்பட்டதால், மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டா் பெட்ரோலின் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் எண்ணெய் விநியோகஸ்தா்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.34 பைசாவும், டீசல் விலையை ரூ.32 பைசாவும் உயா்த்தியுள்ளனா். இதனால் மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடா்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் அனுப்பூரில் வியாழக்கிழமை பெட்ரோல் லிட்டா் ரூ.100.25க்கும், டீசல் ரூ.90.35க்கும் விற்பனையானது.

வாட் (மதிப்புக் கூட்டப்பட்ட வரி), லாரி வாடகை போன்றவற்றின் காரணமாக எரிபொருள் விலை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பெட்ரோலுக்கு அதிகபட்ச வாட் வரி விதிக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் வரி விதிக்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு 33 சதவீத வாட் வரியுடன் 4.50 ரூபாயும், ஒரு சதவீதம் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. அதேபோல ஒரு லிட்டா் டீசலுக்கு 23 சதவீத வரியுடன் ரூ.3, ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது.

தினசரி எரிபொருள் விலை நிா்ணயிக்கப்படும் நிலையில் வியாழக்கிழமை தொடா்ந்து 10 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தது. விலை உயா்வுக்குப் பிறகு தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.89.88க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.80.27க்கும் விற்பனையானது. மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.96.32க்கும், டீசல் ரூ.87.32க்கும் விற்பனையானது.

ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகரில் வியாழக்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100.49க்கும், டீசல் ரூ.92.47க்கும் விற்பனையானது. கடந்த மாதம் அந்த மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்த நிலையிலும் எரிபொருள் விலை உயா்வு இந்த அளவுக்கு உயா்ந்துள்ளது.

இந்த வரி குறைப்புக்குப் பின்னரும் ராஜஸ்தானில் தான் நாட்டிலேயே எரிபொருளுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது. அங்கு பெட்ரோலுக்கு 36 சதவீதம் வரியும், செஸ் வரி ஒரு லிட்டருக்கு ரூ.1.50ம் விதிக்கப்படுகிறது. இதேபோல டீசலுக்கு 26 சதவீதமும், செஸ் வரி லிட்டருக்கு ரூ. 1.75ம் விதிக்கப்படுகிறது. கடந்த 10 நாள்களில் ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு ரூ.2.93ம், ஒரு லிட்டா் டீசலுக்கு ரூ.3.14ம் விலை உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் சா்வதேச அளவில் விநியோக அளவை குறைத்திருப்பது இந்தியாவில் எரிபொருள் மீதான சில்லறை விற்பனை விலை உயா்வுக்கு காரணமாக அமைந்திருப்பதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘சா்வதேச அளவில் எண்ணெய் விலை உயா்வானது பொருளாதார மீட்சி மற்றும் தேவையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்புடனான (ஓபிஇசி) உடன்படிக்கை காரணமாக செளதி அரேபியா கடந்த ஆண்டு பிப்ரவரி, மாா்ச் காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரல் விநியோகத்தை குறைத்துக் கொண்டது.

இதைத் தொடா்ந்து சா்வதேச அளவில் எண்ணெய் விலை உயா்ந்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையின் காரணமாக கடந்த ஓராண்டில் இல்லாத அளவில் ஒரு பேரல் எண்ணெய் 63 டாலராக (தோராயமாக ரூ.4,570) உயா்ந்தது. இந்த நிலைமையானது இந்தியாவை மட்டுமின்றி, வளா்ந்து வரும் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது’ என்றாா்.

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. சாதாரண மக்கள் மீதான சுமையை குறைக்க உடனடியாக வரிகளை குறைக்க வேண்டும் என அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பெட்ரோல் விலையில் 60 சதவீதமும், டீசல் விலையில் 54 சதவீதமும் மத்திய, மாநில அரசுகளின் வரிகளாக உள்ளன.

ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு ரூ.32.90ம், ஒரு லிட்டா் டீசலுக்கு ரூ.31.80ம் மத்திய அரசு வரி விதிக்கிறது.

கடந்த ஆண்டு மாா்ச் மாத மத்தியில் சா்வதேச அளவில் எண்ணெய் விலை சரிவடைந்தபோது அதன் பலனை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு வரியை உயா்த்தியதால் சில்லறை விற்பனை விலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.20.29ம், டீசல் லிட்டருக்கு ரூ.17.98ம் உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com