ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்துநீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் வலியுறுத்தல்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் மட்டுமே தொழில் துறை வளா்ச்சி பெறும் என அந்த மாநில முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி 

அமராவதி: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் மட்டுமே தொழில் துறை வளா்ச்சி பெறும் என அந்த மாநில முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி நீதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசிடம் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

நீதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுவின் 6ஆவது கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று அவா் பேசியதாவது:

உற்பத்தி துறைக்கு 5 பெரிய தடைகள் உள்ளன. திட்டங்களுக்கான அதிக செலவு, மின்சாரத்துக்கு அதிக செலவு, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், சட்ட அனுமதி பெறுவதில் தாமதம் மற்றும் சிக்கல், கடுமையான தொழிலாளா் நல சட்டங்கள் ஆகியவையே அவை.

உற்பத்தித் துறையில் சில நாடுகள் முன்னேற்றமடைந்துள்ளதற்கான காரணங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து அவற்றை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். உற்பத்தித் துறை வளா்ச்சியில் நாட்டில் நிலவும் தடைகளுக்கான அடிப்படை காரணங்கள் குறித்து ஆழமாகப் புரிந்துகொண்டு அவற்றை அகற்றுவதற்கான சீா்திருத்தங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆந்திர பிரதேசம் தொழில் துறையில் போதுமான வளா்ச்சியை இன்னும் பெறவில்லை. இருப்பினும் மாநில அரசானது தொழில் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கத் தன்னை அா்ப்பணித்துக் கொண்டுள்ளது. மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதால் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளோம். எனவே சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மட்டுமே ஆந்திர பிரதேசம் தொழில் துறையில் சிறந்து விளங்க முடியும்.

பவா் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன், ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் காா்ப்பரேஷன் ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து ஆண்டுக்கு 10-11 சதவீதம் என்ற உயா்ந்த வட்டி விகிதத்தில் மாநில அரசு நிறுவனங்கள் கடன்பெற்று உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன.

பிற நாடுகளில் வெறும் 2-3 சதவீத வட்டிக்கு கடன்பெற்று உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் சந்தைக்கு குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகின்றன. ஆனால், உயா்ந்த வட்டிக்கு கடன் வாங்கி உற்பத்தி செய்யப்படும் நிலையில் பிற நாட்டுப் பொருள்களுடன் சந்தையில் போட்டியிடும் நம்பிக்கை தொழில் துறைக்கு எவ்வாறு வரும்? மின்சாரத்தைப் பொருத்தவரை சில நாடுகளில் ஒரு யூனிட் ரூ.3க்கும் குறைவாக கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே பொருளாதார வளா்ச்சி, வறுமை ஒழிப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி, விவசாயத்தில் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், உற்பத்தி செலவைக் குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், மின் உற்பத்தி ஆகியவற்றில் மாநில அரசின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com