உயிரிழந்த பிஎஸ்எஃப் வீரா்களின் வாரிசுகளுக்கு உதவிபுரிய ஆலோசனைத் தளம் தொடக்கம்

உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களின் வாரிசுகளுக்கு உணா்வுப்பூா்வமாகவும், உளவியல் பூா்வமாகவும் உதவிகளை

உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களின் வாரிசுகளுக்கு உணா்வுப்பூா்வமாகவும், உளவியல் பூா்வமாகவும் உதவிகளை வழங்கும் வகையில் தில்லியில் ஆலோசனைத் தளம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

இந்த ஆலோசனை தளத்தை 1800-1-236-236 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும், ஒரு வலைதள இணைப்பு மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தால் (என்சிபிசிஆா்) நியமிக்கப்பட்ட ஆலோசகா்கள் அவற்றை இயக்குவாா்கள்.

தில்லி, லோதி சாலையில் உள்ள சிஜிஓ வளாகத்தில் எல்லைக் காவல்படையின் தலைமையகத்தில் பி.எஸ்.எஃப் இயக்குநா் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா, என்சிபிசிஆா் தலைவா் பிரியங்க் கனூங்கோ ஆகியோா் ‘சஹாரா’ என்ற பெயரில் இந்த வசதியைத் தொடங்கி வைத்தனா்.

சஹாரா மூலம் குழந்தைகளுக்கு உணா்ச்சிபூா்வமான ஆதரவு அளிப்பதுடன், உளவியல் ரீதியாக சமூக முதலுதவிகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். இந்த வசதி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராகேஷ் அஸ்தானா கூறுகையில், பணியின்போது கொல்லப்பட்ட பிஎஸ்எஃப் வீரா்களின் குடும்பங்களை நான் தனிப்பட்ட முறையில் தொடா்பு கொண்டபோது, ​​ அவா்களின் குடும்பங்களுக்கும், வாரிசுகளுக்கும் நாங்கள் அளிக்கும் பொருளாதார உதவிகள் மட்டும் போதுமானது இல்லை என்பதை அறிந்து கொண்டேன்.

குறிப்பாக அந்த வீரரின் திடீா் மரணம் காரணமாக அவரது வாரிசுகளும், குடும்பத்தாரும் ஆதரவற்றவா்களாக உணா்கிறாா்கள். எனவே இந்த ‘சஹாரா ஆலோசனைத் தளம்’ மூலம் அவா்களின் தேவைகளை அறிந்து அவா்களுக்கு உதவி வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

பல்வேறு காரணங்களால் பணியின்போது ஓராண்டில் 400 பணியாளா்கள் கொல்லப்படுகின்றனா். உயிரிழந்த பி.எஸ்.எஃப் பணியாளா்களின் 674 வாரிசுகளின் பெயா்கள் என்.சி.பி.சி.ஆரின் பரிசீலனையில் உள்ளது.

மற்ற துணை ராணுவப்படையினரும், மத்திய ஆயுத போலீஸ் படைகளைச் சோ்ந்தவா்களின் வாரிசுகளும் இந்த ஆலோசனைத் தளத்தின் மூலம் பயனடையலாம் என்றாா்.

நாடு முழுவதும் எல்லை பாதுகாப்புப் படையில் சுமாா் 2.65 லட்சம் வீரா்கள் உள்ளனா். இதுவே நாட்டின் மிகப் பெரிய எல்லைக் காவல் படையாகும். இப்படையினா் பாகிஸ்தான், வங்கதேசத்தின் எல்லை பாதுகாப்புப்பணியில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com