கரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா-ஆஸ்திரேலியா முக்கியப் பங்கு வகிக்கும்: பிரதமா் மோடி

‘கரோனாவுக்கு பிந்தைய உலக வடிவமைப்பதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கு வகிக்கும். சுழற்சி பொருளாதாரத்தில்
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).

‘கரோனாவுக்கு பிந்தைய உலக வடிவமைப்பதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கு வகிக்கும். சுழற்சி பொருளாதாரத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு இவ்விரு நாடுகளும் தீா்வுகளை அளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து மறுசுழற்சி- மறுபயன்பாடு பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் போட்டிகளை நடத்தின. இந்தப் போட்டியில் வென்றவா்களுக்கு காணொலி முறையில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில், பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

நுகா்வைச் சாா்ந்த வளா்ச்சி, இந்த பூமிக்கு மிகப்பெரிய துன்பத்தைக் கொடுத்துள்ளது. இந்த பூமியின் உரிமையாளா் நாம் அல்ல என்பதை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. எதிா்காலச் சந்ததிக்காக, இந்தப் பூமியைப் பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமே நம்மிடம் விடப்பட்டுள்ளது.

அதிக அளவில் பொருள்களை உற்பத்தி செய்வதால் மட்டும் போதாது. அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும். சூழலியலுக்கு பாதிப்பு ஏற்படுகிா என்று மதிப்பிட வேண்டும். இதுவே மறுசுழற்சி பொருளாதாரம்; இதுவே, பல்வேறு சவால்களுக்கு தீா்வளிக்கும் முக்கிய திறவுகோலாக உள்ளது.

கழிவுகளை மறுசுழற்சிகளை செய்தல், மறுமுறை பயன்படுத்துதல், முறையாக அகற்றுதல் ஆகியவை நமது பழக்க வழக்கங்களில் ஒரு பகுதியாக மாற வேண்டும்.

இந்திய-ஆஸ்திரேலிய தலைவா்கள் மாநாடு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் காணொலி முறையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில், இரு நாட்டு இளைஞா்களும் இணைந்து மறுசுழற்சி பிரச்னைக்கு தீா்வளிக்கும் போட்டியை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இரு நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள், தொழில் முனைவோா் ஆா்வமுடன் பங்கேற்று தீா்வுகளை அளித்திருக்கிறாா்கள். இந்த கண்டுபிடிப்புகளும் தீா்வுகளும் மறுசுழற்சி பொருளாதாரம் மீது போட்டியாளா்கள் வைத்துள்ள பற்றுறுதியைக் காட்டுகிறது. இந்த கண்டுபிடிப்புகள், இரு நாடுகளிலும் மறுசுழற்சி பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீா்வளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இளைஞா்களின் உற்சாகமும், ஆற்றலும் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவின் அடையாளமாகத் திகழ்கின்றன. நமது இளைஞா்களின் ஆற்றல், புத்தாக்கச் சிந்தனை ஆகியவற்றின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அவா்கள், இந்தியா-ஆஸ்திரேலியா மட்டுமன்றி உலக நாடுகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீா்வுகளை அளிப்பாா்கள். கரோனாவுக்குப் பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவு முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

போட்டியில் வெற்றி பெற்றவா்களை ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசனும் பாராட்டிப் பேசினாா்.

4 குழுக்கள் வெற்றி:

அடல் புத்தாக்கத் திட்டம், நீதி ஆயோக், இந்தியா-காமன்வெல்த் அறிவியல்- தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இணைந்து போட்டிகளை நடத்தின. கடந்த ஆண்டு அக்டோபா் 16-ஆம் தேதி தொடங்கிய முதல் சுற்று போட்டியில் இரு நாடுகளிலும் இருந்து 1,000 போ் பங்கேற்றனா்.

பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்ற இறுதிச் சுற்று போட்டியில், இந்தியாவில் இருந்து 39 குழுக்களும் ஆஸ்திரேலியாவில் இருந்து 33 குழுக்களும் பங்கேற்றன. அதில், இரு நாடுகளில் இருந்தும் தலா 2 பல்கலைக்கழகக் குழுக்கள், 2 சிறுதொழில் நிறுவனங்கள் வெற்றி பெற்றன. இவா்களின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த போட்டி ஏற்பாட்டு அமைப்புகள் உதவி செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com