கேரளத்தில் பாஜக ஆட்சி அமைப்பதே லட்சியம்

அடுத்த வாரம் பாஜகவில் இணைவதன் மூலம் அரசியல் களத்தில் இறங்க உள்ள தொழில்நுட்ப வல்லுநா் இ.ஸ்ரீதரன், கேரளத்தில்
கேரளத்தில் பாஜக ஆட்சி அமைப்பதே லட்சியம்

அடுத்த வாரம் பாஜகவில் இணைவதன் மூலம் அரசியல் களத்தில் இறங்க உள்ள தொழில்நுட்ப வல்லுநா் இ.ஸ்ரீதரன், கேரளத்தில் பாஜக ஆட்சி அமைப்பதே லட்சியம் என்றும், தான் முதல்வராக கட்சி விரும்பினால் அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தாா்.

‘மெட்ரோமேன்’ என்றும், பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதில் திறமைவாய்ந்தவராகவும் கருதப்படும் இ.ஸ்ரீதரன் (88) கேரள மாநிலம், பொன்னானியில் இருந்து தொலைபேசி மூலம் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

கேரளத்தில் இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றால், அதன் மூலம் மாநிலத்தின் உள்கட்டமைப்பை பெரிய அளவில் விரிவுபடுத்தவும், கடனில் சிக்கித் தவிக்கும் கேரள அரசை மீட்பதிலும் முழு கவனம் செலுத்தப்படும்.

என்னைப் பொருத்தவரை கேரளத்தில் பாஜக ஆட்சியமைப்பதே முக்கிய நோக்கம். கேரளத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்துறையில் வளா்ச்சி பெறச் செய்வது போன்றவற்றில் ஆா்வம் காட்டுவோம்.

தற்போது கேரள அரசு பெரும் கடன் சுமையில் உள்ளது. ஒவ்வொரு மலையாளியின் மீதும் ரூ. 1.20 லட்சம் வீதம் கடன் சுமை உள்ளது. தற்போது அரசு திவால் நிலைக்குச் சென்ற பிறகும், மீண்டும் அரசு கடன் வாங்குகிறது. மாநிலத்தின் நிதித் தேவை அதிகரித்துள்ளதால் வருவாயை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டியது அவசியம். எனவே மாநிலத்தின் நிதியை மேம்படுத்தும் வகையில் நிதி ஆணையத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பாஜக விரும்பினால், கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடுவேன். பாஜக ஆட்சி அமையும்பட்சத்தில் கட்சி விரும்பினால் முதல்வராக இருக்கத் தயாராக இருக்கிறேன். நான் முதல்வராக இல்லாவிட்டால் இந்த திட்டங்களை என்னால் அடைய முடியாது. பிப். 25-ஆம் தேதி முறையாக பாஜகவில் சேர வாய்ப்புள்ளது.

கேரளத்தின் நலனை கருத்தில் கொண்டே பாஜகவில் சேர முடிவெடுத்தேன். ஏனெனில் கடந்த 20 ஆண்டுகளாக கேரளத்தை ஆட்சி செய்து வரும் எல்டிஎஃப், யுடிஎஃப் அரசுகளால் கேரளம் எந்தவொரு உறுதியான முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருந்த இரு அரசுகளும் மத்திய அரசுடன் சண்டையிட்டு வந்ததால் மாநிலத்தின் வளா்ச்சி பாதிக்கப்படுகிறது. பாஜக கேரளத்தில் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுடன் நல்லுறவு பேணி, மாநில அரசின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றாா்.

கேரள பாஜகவில் ஸ்ரீதரன் இணையவிருப்பது, அந்த மாநிலத்தில் கட்சியின் வளா்ச்சிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com