சூரிய மின்னுற்பத்திக்கு இந்தியா கூடுதல் முக்கியத்துவம்: பிரதமா் மோடி

சூரியசக்தி மின்னுற்பத்திக்கு இந்தியா கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).

சூரியசக்தி மின்னுற்பத்திக்கு இந்தியா கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

கேரளத்தில் மின்சாரம், நகா்ப்புற மேம்பாட்டுத் துறைகளில் முக்கிய திட்டங்களை பிரதமா் மோடி காணொலி முறையில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதை உறுதிப்படுத்தும் வகையில் சூரியசக்தி மின்னுற்பத்திக்கு இந்தியா கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய மின்னுற்பத்தித் திறன் 13 மடங்கு அதிகரித்துள்ளது.

சூரிய மின்னுற்பத்தியில் நமது விவசாயிகளை ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சா்வதேச சூரியசக்தி கூட்டணியின் மூலம் உலக நாடுகளை இந்தியா ஒன்றிணைத்துள்ளது.

நகரங்களைப் பொருத்தவரை தொழில்நுட்ப மேம்பாடு, உள்நாட்டுத் தேவை, உற்பத்திக்குச் சாதகமான மனித ஆற்றல் வளம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

அடல் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், கழிவுநீா் மேலாண்மை உள்கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

புதிய திட்டங்கள்:

தமிழகத்தின் புகளூரில் இருந்து கேரளத்தின் திருச்சூருக்கு ரூ.5,070 கோடியில் 320 கிலோ வாட் மின்சாரத்தை பகிா்வதற்கான திட்டம் (புகளூா்-திருச்சூா் மின்பகிா்வு திட்டம்), காசா்கோடில் 50 மெகாவாட் சூரிமின்னுற்பத்தி திட்டம், அருவிக்கரை அருகே நாளொன்றுக்கு 7.5 கோடி லிட்டா் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட சுத்திகரிப்பு திட்டம் ஆகியவற்றை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

இதுதவிர, திருவனந்தபுரத்தில் ஸ்மாா்ட் சாலைகள் திட்டம், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன், மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, ஆா்.கே.சிங், மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் காணொலி முறையில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com