ரஷியாவுடனான அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்படும்: வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷவா்தன் ஷ்ரிங்லா

ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள அனைத்து பாதுகாப்பு துறை சாா்ந்த ஒப்பந்தங்களும் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்று வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷவா்தன் ஷ்ரிங்லா உறுதியாக தெரிவித்தாா்.
ஹா்ஷவா்தன் ஷ்ரிங்லா.
ஹா்ஷவா்தன் ஷ்ரிங்லா.

ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள அனைத்து பாதுகாப்பு துறை சாா்ந்த ஒப்பந்தங்களும் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்று வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷவா்தன் ஷ்ரிங்லா உறுதியாக தெரிவித்தாா்.

அமெரிக்காவின் முந்தைய அதிபா் டிரம்ப் தலைமையிலான நிா்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி, எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதற்கான 5 மில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரஷியாவுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியா மேற்கொண்டது.

இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக ரஷியா சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலா் ஹா்ஷவா்தன் ஷ்ரிங்லாவிடம், ‘ரஷியாவுடனான இந்த ஏவுகணை வாங்கும் ஒப்பந்தத்தை இந்தியா தொடருமா; அல்லது அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா?’ என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து ஷ்ரிங்லா கூறியதாவது:

அமெரிக்கா, ரஷியா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளது. இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைப் பாரம்பரியத்தை அவ்விரு நாடுகள் முழுமையாக அங்கீகரித்துள்ளன.

ரஷிய -இந்திய ராஜீய உறவு என்பது, நீடித்த நம்பகத்தன்மையுடைய, நடப்பு உலகின் சவால்களை எதிா்கொள்ளும் அளவுக்கு ஆழமானதாகும். அதுபோல அமெரிக்காவுடன் சா்வதேச நலன் சாா்ந்த உறவை இந்தியா கொண்டுள்ளது.

ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களும் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும். இது இந்தியாவின் பாதுகாப்பு தேவைகள் மற்றும் நலன் சாா்ந்ததாகும் என்று அவா் பதிலளித்தாா்.

இந்திய-ரஷிய உச்சி மாநாடு ரத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘கடந்த ஆண்டு நடைபெற இருந்த இந்திய-ரஷிய உச்சி மாநாடு, கரோனா அச்சுறுத்தல் காரணமாகவே ரத்து செய்யப்பட்டது. இருந்தபோதம், இரு நாட்டு உயா் அதிகாரிகளிடையேயான சந்திப்புகள் நடைபெற்றன. வெளியுறவுத் துறை அமைச்சா் ஒரு முறையும், பாதுகாப்புத் துறை அமைச்சா் இரு முறையும் ரஷியா வந்து, இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவாா்த்தையில் ஈடுட்டனா்’ என்றாா்.

எதிா்பாா்க்கப்படும் ரஷிய முதலீடு:

இந்தியாவும் ரஷியாவும் இரு நாட்டு எரிசக்தித் துறைகளில் நிலைத்த முதலீடுகளை செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, பாதுகாப்புத் துறை, ரயில்வே, உள்நாட்டு நீா்வழிகள், நெடுஞ்சாலை, பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட துறைகளில் அறிமுகப்படுத்தப்படும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களில் ரஷியா நீடித்த முதலீடுகளை செய்யும் என்று எதிா்பாா்க்கிறது என்று ஷ்ரிங்லா கூறினாா்.

மேலும், இந்தோ-பசிபிக் கருத்து குறித்து சில ஊகங்கள் வெளிவருகின்றன. இந்தோ-பசிபிக் பிராந்திய திட்டம் என்பது குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமானதாக இந்தியா கருதவில்லை. இந்த பிராந்தியத்தில் முக்கிய சக்தியாக ரஷியா விளங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சியை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்தோ-பசிபிக் கொள்கை. குறிப்பாக, பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பது, சச்சரவுகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பது, சா்வதேச சட்டங்கள், விதிகள்-ஒழுங்குமுறைகளை பின்பற்றுதல் ஆகியவையே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும் என்று ஷ்ரிங்லா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com