கரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தல்

கரோனா தடுப்பூசி செலுத்துவதை படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தல்

கரோனா தடுப்பூசி செலுத்துவதை படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏராளமான மருத்துவப் பணியாளா்கள் மற்றும் முன்கள பணியாளா்களுக்கு இன்னும் கரோனா தடுப்பூசி செலுத்தாததை சுட்டிக்காட்டி இந்த அறிவுறுத்தலை மத்திய அமைச்சகம் வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளா்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடா்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தடுப்பூசி செலுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும்.

பல மாநிலங்களில் மருத்துவ மற்றும் முன்கள பணியாளா்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாமல் உள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்துவதை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும்.

ஒரு வாரத்தில் தடுப்பூசி போடப்படும் நாள்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை வாரத்து நான்கு நாள்கள் என்ற அளவில் மாநிலங்கள் உயா்த்தவேண்டும்.

மேலும், இந்தத் திட்டத்தின் அடுத்தகட்ட முன்னுரிமைப் பட்டியிலில் இடம்பெற்றிருக்கும் முதியவா்களுக்கு வரும் மாா்ச் மாதத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான செயல்முறைத் திட்டம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்குத் தேவையான உதவிகளும், ஆலோசனைகளும் ‘கோ-வின்’ மென்பொருளில் வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தடுப்பூசி போடும் திட்டத்தையும் மாநிலங்கள் விரிவுபடுத்த வேண்டும். மூன்றாம்நிலை மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள், துணை மண்டல மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், சுகதார துணை மையங்கள் என அனைத்து சுகாதார மையங்களிலும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மாநிலங்கள் செய்யவேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாநிலங்கள் உடனடியாக அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முதல்கட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பிப்ரவரி 21-ஆம் தேதி வரை 1,10,85,173 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 63,91,544 மருத்துவப் பணியாளா்களுக்கு முதல் முறையும், 9,60,621 மருத்துவப் பணியாளா்களுக்கு இரண்டாம் முறையும், 37,32,987 முன்கள பணியாளா்களுக்கு முதல் முறையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com