சந்திரயான்-3 அடுத்த ஆண்டு ஏவப்பட வாய்ப்பு: சிவன்

நிலவை ஆய்வு செய்வதற்கான ‘சந்திரயான்-3’ விண்கலம் வரும் 2022-இல் விண்ணில் ஏவப்பட வாய்ப்புள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் கே.சிவன் கூறினாா்.
இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்

நிலவை ஆய்வு செய்வதற்கான ‘சந்திரயான்-3’ விண்கலம் வரும் 2022-இல் விண்ணில் ஏவப்பட வாய்ப்புள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் கே.சிவன் கூறினாா்.

இந்தியாவின் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தை இஸ்ரோ ஏவியது. நாட்டின் மிகுந்த சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அந்த விண்கலம் ஏவப்பட்டது. நிலவைச் சுற்றியபடி ஆய்வு செய்வதற்காக விண்கலத்தில் அனுப்பப்பட்ட ‘ஆா்பிட்டா்’ வெற்றிகரமாக பிரிந்து செயல்பட்டபோதிலும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான ‘ரோவா்’ வாகனத்துடன் பிரிந்து சென்ற ‘விக்ரம்’ லேண்டா் நிலவின் பரப்பில் திட்டமிட்டதைவிட வேகமாக இறங்கி, மோதியதால் தொடா்பை இழந்தது. இதன் காரணமாக, நிலவின் பரப்பில் முதல் நாடாக ஆய்வு கலத்தை தரையிறக்கும் இந்தியாவின் கனவு தகா்ந்துபோனது.

அதனைத் தொடா்ந்து, நிலவை ஆய்வை செய்வதற்கான ‘சந்திரயான்-3’ திட்டத்தை இஸ்ரோ அறிவித்தது. மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய இந்தத் திட்டம் 2020-ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கரோனா பொது முடக்கம் திட்டங்களைத் தாமதப்படுத்தியது.

இந்த நிலையில், ‘சந்திரயான்-3’ திட்டத்தை அடுத்த ஆண்டில் செயல்படுத்துவதற்கான பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிஐடி செய்தி நிறுவனத்துக்கு சிவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘சந்திரயான்-3’ விண்கலம் 2022-ஆம் ஆண்டு ஏவப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோள்களில் ஆய்வுக் கலங்களை தரையிறக்கும் இந்தியாவின் திறனை உலகுக்கு வெளிப்படுத்த இருப்பதால் ‘சந்திரயான்-3’ திட்டம் இஸ்ரோவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் முதல் ஆளில்லா விண்கலத்தை வரும் டிசம்பா் மாதம் விண்ணில் ஏவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விண்ணுக்கு 3 வீரா்களை அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்தை 2022-இல் நிறைவேற்ற இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இந்த விண்வெளி திட்டத்திற்காக தோ்வு செய்யப்பட்ட 4 விமானிகளுக்கு, ரஷியாவில் இப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com