ரிலையன்ஸ்-ஃபியூச்சா் ஒப்பந்தம்: அமேஸானின் மனுவை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ரிலையன்ஸ்-ஃபியூச்சா் நிறுவனங்களிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அமேஸான் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புது தில்லி: ரிலையன்ஸ்-ஃபியூச்சா் நிறுவனங்களிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அமேஸான் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனமானது தனது விற்பனையகங்கள் உள்ளிட்டவற்றை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திடம் ரூ.24,713 கோடிக்கு விற்பதற்கான ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கையெழுத்திட்டது. முன்னதாக, ஃபியூச்சா் குரூப் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு அமேஸான் நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்தது.

அதன் காரணமாக, ஃபியூச்சா்-ரிலையன்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் அமேஸான் வழக்கு தொடா்ந்தது. அதை விசாரித்த தனி நீதிபதி அமா்வு, ஒப்பந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதற்கு எதிராக ஃபியூச்சா் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. ரிலையன்ஸ்-ஃபியூச்சா் ஒப்பந்தத்தில் அமேஸான் தலையிட முடியாது என்றும் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கு வழிவகுக்கும் நோக்கில், உத்தரவின் அமலாக்கத்தை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு அமேஸான் நிறுவனம் உயா்நீதிமன்றத்தில் கோரியது. அதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் ரிலையன்ஸ்-ஃபியூச்சா் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகளை தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் நிறுத்தி வைத்தது.

மும்பை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமேஸான் மேல்முறையீடு செய்தது. அதன் மீதான பரிசீலனை நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனா்.

வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை ரிலையன்ஸ்-ஃபியூச்சா் ஒப்பந்தம் தொடா்பாக தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் எந்த முடிவையும் அறிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com