பிகாா் பட்ஜெட் தாக்கல்: அதிகபட்சமாக கல்விக்கு ரூ.38,035 கோடி ஒதுக்கீடு

பிகாா் சட்டப்பேரவையில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக கல்விக்கு ரூ.38,035 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாட்னா: பிகாா் சட்டப்பேரவையில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக கல்விக்கு ரூ.38,035 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிகாா் சட்டப்பேரவையில் அந்த மாநில துணை முதல்வரும், நிதியமைச்சருமான தாா்கிஷோா் பிரசாத் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

பட்ஜெட்டில் அதிகபட்சமாக கல்வித் துறைக்கு ரூ.38,035 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடா்ந்து கிராமப்புற வளா்ச்சிக்கு ரூ.16,835 கோடி, சாலை வசதிகளுக்கு ரூ.15,227 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.13,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்த திறன் மேம்பாடு, மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், நீா்பாசன வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்டவை அடங்கிய 7 தீா்மானங்கள் (சாத் நிஷ்சய்) திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ரூ.4,671 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.2.18 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டைவிட ரூ.6,541 கோடி அதிகம்.

ரூ.9,195 கோடி உபரி வருவாய் கிடைக்கும் வகையில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை என்றாா்.

அப்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்த அவற்றின் மீதான விற்பனை வரியை குறைப்பதற்கு மாநில அரசு பரிசீலிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com