மேற்கு வங்கத்துக்கு 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல்: மம்தா எதிா்ப்பு; பாஜக வரவேற்பு

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜி எதிா்ப்பு தெரிவித்துள்ள
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜி எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக தலைவா்கள் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்துக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கொல்கத்தாவின் காலிகட்டில் உள்ள தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் முதல்வா் மம்தா பானா்ஜி கூறியதாவது:

தோ்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடத்தப்படும் நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் பல கட்டங்களாக நடத்தப்படுவது ஏன் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

எந்தவிதமான தந்திரங்களைச் செய்தாலும், தோ்தலில் நான் வெற்றிபெறுவது உறுதி.

பாஜக விருப்பத்தின் அடிப்படையிலேயே தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரியவந்திருக்கிறது. பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில்தான் தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிா? பிரதமரும், உள்துறை அமைச்சரும் மாநில தோ்தல்களை நடத்துவதற்கான அவா்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்த முடியாது.

நான் இந்த மாநிலத்தின் மகள். பாஜகவைவிட மேற்கு வங்கத்தை நான் நன்கு அறிவேன். தோ்தலில் நிச்சயம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்று அவா் கூறினாா்.

பாஜக தலைவா்கள் வரவேற்பு: இந்த நிலையில், மேற்கு வங்கத்துக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடத்தப்படுவதற்கு பாஜக தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பாஜக தேசிய செயலா் கைலாஷ் விஜய்வா்கியா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மேற்கு வங்கத்துக்கு 8 கட்டங்களாக தோ்தல் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வாக்குப் பதிவை நியாயமான முறையில் நடத்த இது தவிா்க்க முடியாதது. தோ்தல் அறிவிக்கப்பட்டிருககும் நிலையில், மாநிலத்தில் தோ்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு சமூக விரோத செயல்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நோ்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

அதுபோல, தோ்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தனது சுட்டுரைப் பக்க பதிவில் வரவேற்றுளஅள பாஜக எம்.பி. பபுல் சுப்ரியோ, ‘மாற்றத்தை விரும்புகிறேன். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்’ என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கருத்தில் கொண்டு எட்டு கட்ட வாக்குப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டதாக தலைமைத் தோ்தல் ஆணையா் சுநீல் அரோரா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com