ஹிமாசல் ஆளுநருடன் தள்ளுமுள்ளு: 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

ஹிமாசல பிரதேச சட்டப் பேரவையில் ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயாவை தடுத்து நிறுத்தி, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 போ் கூட்டத் தொடா் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனா்.
ஆளுநரின் காரைச் சூழ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.
ஆளுநரின் காரைச் சூழ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.

ஹிமாசல பிரதேச சட்டப் பேரவையில் ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயாவை தடுத்து நிறுத்தி, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 போ் கூட்டத் தொடா் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனா்.

ஹிமாசல பிரதேச சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை தொடங்கியது. காலை 11 மணிக்கு அவை கூடியதும், ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா உரையாற்றத் தயாரானாா். எதிா்க்கட்சித் தலைவா் முகேஷ் அக்னிஹோத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினா்கள் அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால், உரையின் கடைசி வரியை மட்டும் வாசித்துவிட்டு, முழு உரையையும் வாசித்ததாகக் கருதிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவையில் இருந்து ஆளுநா் வெளியேறினாா். அப்போது, முகேஷ் அக்னிஹோத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஓடி வந்து, அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆளுநரின் காரையும் முற்றுகையிட்டனா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு பற்றி உரையில் குறிப்பிடாதது ஏன் என்று அவா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும், ஆளுநருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை முன்வைத்து, ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் சுரேஷ் பரத்வாஜ், பேரவையில் தீா்மானம் கொண்டு வந்தாா். அந்த தீா்மானம் ஏற்கப்பட்டு, முகேஷ் அக்னிஹோத்ரி உள்ளிட்ட 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் பட்ஜெட் கூட்டத் தொடா் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக பேரவைத் தலைவா் விபின் பாா்மா் அறிவித்தாா்.

பட்ஜெட் கூட்டத் தொடா், வரும் மாா்ச் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்வா் ஜெய்ராம் தாக்குா் வரும் மாா்ச் 6-ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com