தேர்தல் அரசியலில் பாஜகவுக்கு ஆதாயம் அளித்த 2020!

நெருக்கடிகளை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பானது 2020-ஆம் ஆண்டில் பாஜகவுக்கு பல ஆதாயங்களைக் கொடுத்துள்ளது.
தேர்தல் அரசியலில் பாஜகவுக்கு ஆதாயம் அளித்த 2020!


புதுதில்லி: நெருக்கடிகளை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பானது 2020-ஆம் ஆண்டில் பாஜகவுக்கு பல ஆதாயங்களைக் கொடுத்துள்ளது. அதேவேளையில் தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் அக்கட்சிக்கு பெரும் சவாலை அளித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்று பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தது. அந்த நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் போராடியதால், பல்வேறு நாடுகளில் அரசுகளின் மீதான ஒப்புதல் மதிப்பீடு குறைந்தது. ஆனால், இந்தியாவில் காங்கிரஸ் மேலும் பலவீனமடைந்து, ஆளும் பாஜக வளர்ச்சிப் பாதையில் செல்வதன் மூலம் இந்திய அரசியல் ஒரு வித்தியாசமான நடைமுறையைப் பின்பற்றியது.

இருப்பினும் ஆண்டு நிறைவடையும் வேளையில் விவசாயிகளின் போராட்ட வடிவில் பாஜகவுக்கு சவால் ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திவரும் மாபெரும் போராட்டமானது, பாஜக 2014-இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்கொள்ளும் மிகத் தீவிரமான சவாலாகும். இப்பிரச்னையில் பாஜகவின் நீண்டகால கூட்டணிக் கட்சியாக இருந்த சிரோமணி அகாலி தளம், பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது. அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் பதவி விலகியதன் மூலம், மோடி அமைச்சரவையில் பாஜக அல்லாத கட்சியை சேர்ந்தவர் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

பிகாரில்...: பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, பாஜகவை பாராட்டியபோதும் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டது. இதனால் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பேரவைத் தேர்தலில் சுமாரான வெற்றியையே பெற முடிந்தது. இதனால் அக்கட்சியுடனான உறவும் பாஜகவுக்கு சீராக இல்லை. அதேவேளையில் அத்தேர்தலில் போட்டியிட்ட 110 தொகுதிகளில் 74 இடங்களில் வென்றதன் மூலம் அம்மாநிலத்தில் முதல் முறையாக தே.ஜ. கூட்டணிக்கு தலைமை தாங்கும் நிலைக்கு வந்துள்ளது. 

கரோனா தொற்று பரவும் வேளையில், நெருக்கடிகளை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு வாக்காளர்களை ஈர்த்தது. ஏழைகளுக்கான திட்டங்கள், ஆத்மநிர்பார் பாரத் திட்டத்துக்கான மோடியின் பிரசாரம் போன்றவை அக்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

உள்ளாட்சித் தேர்தல்களில்...:  2020-இல் தில்லி, பிகார் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம் ஆகியவற்றில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும், ராஜஸ்தான், கோவா, ஹைதராபாத், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் ஆகியவற்றில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக வலுவான வெற்றியைப் பெற்றது.

உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசத்தில் பாஜக தனது வலிமையைக் காட்டியதன் மூலம் அம்மாநிலங்களில் தனது பலத்தை நிரூபித்த நிலையில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு (டிஆர்எஸ்) எதிராக பிரதான கட்சியாக உருவெடுத்தது. துபாக்கா தொகுதி இடைத்தேர்தலில் டிஆர்எஸ் கட்சியை தோற்கடித்த பாஜக, ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலிலும் கடும் சவால் அளித்தது. வெறும் 4 வார்டுகளை வென்றிருந்த நிலையில் இத்தேர்தலில் பாஜகவின் வெற்றி எண்ணிக்கை 48-ஆக உயர்ந்தது. டிஆர்எஸ் கட்சி கடந்த தேர்தலில் 99 வார்டுகளை வென்றிருந்த நிலையில் இத்தேர்தலில் 55 வார்டுகளாக குறைந்தது.

ஜம்மு காஷ்மீரில்...: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் 75 இடங்களில் வென்றதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. ஜம்முவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய பாஜக, காஷ்மீரிலும் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.

பாஜகவுக்கு பின்னடவைத் தந்த மாநிலம் கேரளம். அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தையே பாஜகவால் பிடிக்க முடிந்தது.

இதுதவிர ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்திலும் பாஜக ஏற்கெனவே தனது நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது.

சத்தீஸ்கரை தவிர பிற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸின் குறைந்த செயல்திறனானது தேசிய அரசியலில் பாஜகவுக்கு சவால் அளிக்க யாரும் இல்லை என்ற நிலையை தொடரவைக்கிறது.

அயோத்தியில் கடந்த ஆகஸ்டில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமரால் மேற்கொள்ளப்பட்ட பூமி பூஜை, அதைத் தொடர்ந்து, லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டது, அதன் அரசியலமைப்பு விமர்சகர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது ஆகியவை பாஜக அதன் ஹிந்துத்துவா மைய தளத்தை வலுப்படுத்த உதவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com