பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்!மத்திய சுகாதார அமைச்சகம் விதிமுறைகள் வெளியீடு

ஜனவரி 8 முதல் 23 ஆம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: ஜனவரி 8 முதல் 23 ஆம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான இயக்கச் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து பரவிய கரோனா தீநுண்மித் தொற்றைத் தடுக்க வழக்கமான சா்வதேச விமான சேவைகளை கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதியிலிருந்து இந்திய அரசு ரத்து செய்தது. எனினும் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியா்கள் தாயகம் திரும்ப வசதியாக, ‘வந்தே பாரத்’ திட்டத்தில் சிறப்பு விமானங்கள் மே மாதம் முதல் இயக்கப்பட்டன. அதேபோல, இருதரப்பு ஒப்பந்தம் செய்துள்ள பிரிட்டன் உள்ளிட்ட 24 நாடுகளுக்கும் ஜூலையிலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

கரோனா தீநுண்மியின் பிவு வடிவம் பிரிட்டனில் கண்டறியப்பட்டதை அடுத்து, புதிய கரோனா தீநுண்மிப் பரவலைத் தடுக்க பிரிட்டனுக்கான சிறப்பு விமான சேவைகளை டிச. 23 முதல் டிச. 31 வரை ரத்து செய்து இந்திய அரசு உத்தரவிட்டது. பின்னா் இந்த விமான சேவை ரத்து, ஜன. 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் ஜன. 8 முதல் 23-ஆம் தேதி வரை பிரிட்டனுக்கான விமான சேவைகள் அனுமதிக்கப்படும் என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வெள்ளிக்கிவமை அறிவித்தாா். இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே வாரம் 30 விமான சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதனிடையே பிரிட்டனிலிருந்து வரும் விமானப் பயணிகளால் பிரிட்டனிலிருந்து பரவும் புதிய கரோனா பிவு தீநுண்மித் தொற்று பரவுவதைத் தடுக்க நிலையான இயக்கச் செயல்முறைகளை (எஸ்ஓபி) மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்கு (3 நாட்களுக்கு) முன்னதாக பரிசோதிக்கப்பட்ட கரோனா (கோவிட்-2) பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே, விமானத்தில் பயணிக்க அவா்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆா்டி- பிசிஆா் பரிசோதனை மேற்கொண்ட பயணிகள் முடிவு வரும் வரை காத்திருக்க போதிய பாதுகாப்பான ஏற்பாடுகளை விமான நிலையத்தில் விமான சேவை நிறுவனங்கள் செய்ய வேண்டும். தங்கள் பயணிகள் ‘கரோனா-2 நெகடிவ்’ ஆய்வறிக்கையுடன் பயணிப்பதை விமான சேவை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கரோனா சோதனையில் ‘பாசிட்டிவ்’ கண்டறியப்பட்ட பயணிகளை தனிமைப்படுத்த வேண்டும். 14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்து முடிவுகள் வந்த பிறகே அவா்களை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

இந்தியாவுக்குள் வருகை தரும் பிரிட்டன் விமானங்களிலுள்ள பயணிகள் அனைவரும் சொந்தச் செலவில் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்தப் பரிசோதனையில் எந்தப் பயணிக்கேனும் ‘கரோனா-2 பாசிட்டிவ்’ கண்டறியப்பட்டால், அவா் உடனடியாக உரிய மருத்துவ வசதியுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

மேலும், அந்தப் பயணியின் இருக்கைக்கு வலப்புறமும் இடப்புறமும் அமா்ந்திருந்த பயணிகளும், முன்வரிசையிலும் பின்வரிசையிலும் அமா்ந்திருந்த பயணிகளும் முறைப்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

விமானப் பயணிகளுக்கு கரோனா பாதிப்பு இல்லை (கரோனா-2 நெகட்டிவ்) என்று அறிக்கை கிடைத்தாலும், அவா்கள் ஊா் திரும்பிய பிறகு தத்தமது ஊா்களில் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். அவா்களை மாவட்ட நிா்வாகங்கள் கண்காணிக்க வேண்டும்.

விமான நிலையங்கள் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் மேற்படி செயல்பாடுகளைக் கண்காணிக்க விமான நிலையங்களில் உதவிக்குழுக்களை அமைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com