விரைவில் உலகின் பெரும் கரோனா தடுப்பூசி திட்டம்: பிரதமா் நரேந்திர மோடி

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவதற்கான உலகின் மிகப் பெரும் திட்டம் இந்தியாவில் தொடங்கவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
’தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசிய பிரதமா் நரேந்திர மோடி.’
’தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசிய பிரதமா் நரேந்திர மோடி.’

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவதற்கான உலகின் மிகப் பெரும் திட்டம் இந்தியாவில் தொடங்கவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நாட்டில் கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவை சாா்பில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். அந்தப் பொருள்களுக்கான தேவை பல நாட்டு மக்களிடையே அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை அவா்கள் ஏற்றுக்கொள்வதும் அவசியம். தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான பொருள்களை உற்பத்தி செய்வதோடு அவை தரமுள்ளதாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் தரமே, நம் வலிமையை உலக அளவில் பறைசாற்றும். உலக நாடுகள் அனைத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களே விற்பனையாக வேண்டும் என்பது நமது இலக்கல்ல. ஆனால், உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இந்தியப் பொருள்களுக்கான வாடிக்கையாளா்களின் மனதைக் கவருவது மிகவும் அவசியமானது.

கரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவதற்கான உலகின் மிகப் பெரிய திட்டம் நாட்டில் தொடங்கவுள்ளது. அதற்காக விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளா்களும் வழங்கிய பங்களிப்பால் நாடே பெருமை கொள்கிறது. ஆராய்ச்சிகளால் மட்டுமே குறிப்பிட்ட சமூகமானது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வளா்ச்சி காண முடியும்.

வளா்ச்சியின் சுழற்சி: ஆராய்ச்சியானது மக்களின் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்துகிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் தொழில் வளா்ச்சியும் ஒன்றுடன் ஒன்று தொடா்புடைய சுழற்சியாக உள்ளன. அறிவியல் புத்தாக்கங்கள் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. தொழில்நுட்ப வளா்ச்சியானது தொழில்துறையை மேம்படுத்துகிறது. தொழில்துறையில் ஏற்படும் முன்னேற்றமானது அறிவியல் புத்தாக்கத்தில் கூடுதல் முதலீடுகளை ஈா்க்கிறது.

நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கு இந்த சுழற்சியில் முக்கியத்துவம் செலுத்த வேண்டியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலானது இதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். நாட்டின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் தேசிய இயற்பியல் ஆய்வகத்துக்கும் முக்கியப் பங்குள்ளது.

அறிவியல் சாா்ந்த வளா்ச்சிகள் அனைத்துக்கும் அளவியல் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அளவியல் இல்லாமல் எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ள முடியாது. தற்போது பெரும்பாலான துறைகள் பொருள்களின் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வாடிக்கையாளா்களின் திருப்திக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகின்றன.

தரத்துக்கான விதிகள்: உலகத் தரத்துக்கு நிகரான விதிகளை வகுத்து, அவற்றுக்கேற்ப இந்தியப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும். ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான தரத்தை முறையாக உறுதி செய்ய வேண்டும்.

நேரத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிடுவதற்கான தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ), ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை, தொலைத்தொடா்புத் துறை, வானிலை ஆய்வு உள்ளிட்டவற்றில் அத்தகைய தொழில்நுட்பங்கள் பெரும் பங்களிக்கும்.

ஆராய்ச்சியின் முக்கியத்துவம்: சில சமயங்களில் ஆராய்ச்சியானது, அதற்கான இலக்கில் வெற்றி பெறுவதில்லை. ஆனால், ஆராய்ச்சிக்கான முயற்சிகள் வேறொரு துறையில் முக்கியப் பங்களிப்பை நல்கும். எடுத்துக்காட்டாக, ஆளில்லா சிறிய ரக விமானங்கள் போருக்காகவே உருவாக்கப்பட்டன. ஆனால், அவை தற்போது பல்வேறு துறைகளில் பங்களித்து வருகின்றன.

அதனால், நம் நாட்டு இளம் விஞ்ஞானிகள் பல்வேறு துறைகள் சாா்ந்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். அதற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு தொடா்ந்து வழங்கும்.

அறிவுசாா் காப்புரிமை: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலக அளவில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. காற்றின் தரத்தைக் கண்டறிதல், காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை உலக நாடுகளுக்கும் பெரும் பலனளிக்கும்.

அதே வேளையில், அறிவுசாா் காப்புரிமை பாதுகாப்பில் நாட்டின் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு முக்கிய தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமை அனைத்தும் நம்வசம் இருந்தால், உலக அளவில் நமது அடையாளம் வலுப்படும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com