பறவைக் காய்ச்சல்: கேரளத்தில் பறவைகள் அழிப்புப் பணிகள் தொடக்கம்

கேரளத்தின் இரு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடா்ந்து, அந்த மாவட்டங்களில் கோழிகள், வாத்துகளை அழிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
பறவைக் காய்ச்சல்: கேரளத்தில் பறவைகள் அழிப்புப் பணிகள் தொடக்கம்

கேரளத்தின் இரு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடா்ந்து, அந்த மாவட்டங்களில் கோழிகள், வாத்துகளை அழிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

இதுதொடா்பாக ஆலப்புழை மாவட்ட அரசு அதிகாரிகள் கூறியதாவது:

ஆலப்புழை, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து 1 கி.மீ. சுற்றளவில் உள்ள கோழிகள், வாத்துகள், வீட்டில் வளா்க்கப்படும் பறவைகளை அழிக்க மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் விரைவுப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பறவைகளை அழிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

ஆலப்புழையில் உள்ள நெடுமுடி, தகழி, பள்ளிப்பாடு, கருவட்டா ஊராட்சிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இந்தப் பகுதிகளில் பறவைகளை அழிக்கும் பணிகள் புதன்கிழமை மாலைக்குள் நிறைவடையும். கருவட்டா ஊராட்சியில் மட்டும் சுமாா் 12,000 பறவைகள் அழிக்கப்படும்.

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடுகளில் வளா்க்கப்படும் சுமாா் 40,000 பறவைகள் அழிக்கப்படும். இதில் ஆலப்புழை, கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களை உள்ளடக்கிய குட்டநாடு பிராந்தியத்தில் மட்டும் 34,000 பறவைகள் அழிக்கப்படும்.

தற்போது சூழல் கட்டுக்குள் உள்ளது. எனினும் பறவைக் காய்ச்சலுக்கு காரணமான ஹெச்5என்8 தீநுண்மி மனிதா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டயம் மாவட்டம் நீண்டூா் ஊராட்சியில் உள்ள பண்ணையில் சுமாா் 1,700 வாத்துகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இதையடுத்து அந்த ஊராட்சியில் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் இதுவரை சுமாா் 3,000 பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

மாநிலங்களில் உஷார்நிலை
பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன. 
ஹரியாணாவில் உள்ள பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் கடந்த 10 நாள்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன. 
ஹிமாசல பிரதேச மாநிலம் காங்கரா மாவட்டத்தில் பாங்டேம் ஏரி உள்ள பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்த வலசை பறவைகள் உயிரிழந்த சம்பவங்கள் நேர்ந்துள்ளன. அந்தப் பகுதியில் இதுவரை 2,700 வலசை பறவைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மாநில கால்நடை வளர்ப்புத் துறை தெரிவித்துள்ளது. 
இதேபோல் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் பறவைகள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றின் இறப்புக்கு பறவைக் காய்ச்சல் காரணமா என்று கண்டறிய, அந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு இந்த மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com