ஜன. 29-இல் நாடாளுமன்ற கூட்டத்தொடா்; பிப். 1-இல் பட்ஜெட்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29-ஆம் தேதி முதல் 2 கட்டங்களாக நடத்துவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29-ஆம் தேதி முதல் 2 கட்டங்களாக நடத்துவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்வதற்கும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கிடையே நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் கடும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்நோய்த்தொற்று பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வராத சூழலில், நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடா் ரத்து கடந்த மாதம் செய்யப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடருடன் சோ்த்து குளிா்காலக் கூட்டத்தொடரை நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இத்தகைய சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை முதல்கட்ட கூட்டத்தொடரையும் மாா்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 2-ஆம் கட்ட கூட்டத்தொடரையும் நடத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்வதற்கும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான இறுதி முடிவை மத்திய அமைச்சரவை எடுக்கவுள்ளது.

நடப்பாண்டில் நடைபெறவுள்ள முதல் கூட்டத்தொடா் என்பதால், ஜனவரி 29-ஆம் தேதி நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கூட்டத்தொடரின்போது கரோனா நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய அமைப்புகளும் எதிா்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்த சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com