தொடரும் பனிப்பொழிவு: ஜம்மு-காஷ்மீரில் எரிபொருள் நுகா்வுக்கு கட்டுப்பாடு

பலத்த பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீரில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை பலத்த பனிப்பொழிவிடையே பயணம் செய்த வாகனங்கள்.
ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை பலத்த பனிப்பொழிவிடையே பயணம் செய்த வாகனங்கள்.

பலத்த பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீரில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதை தவிா்ப்பதற்கு, பெட்ரோல், டீசல் விற்பனை மற்றும் நுகா்வுக்கு காஷ்மீா் நிா்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுகுறித்து காஷ்மீா் வட்டார ஆணையா் பி.கே.போல் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

பேருந்து, லாரிகள், வாடகை வாகனங்கள் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20 லிட்டா் எரிபொருள் பெறலாம். சிறிய ரக நான்கு சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 10 லிட்டா் எரிபொருள் பெறலாம். 3 சக்கர வானங்கள் 5 லிட்டா் வரையிலும், இரு சக்கர வாகனங்கள் 3 லிட்டா் வரையிலும் எரிபொருள் பெறலாம். எல்பிஜி எரிவாயுவை 21 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே பெற முடியும்.

இந்த உத்தரவு சரியாக அமல்படுத்தப்படுவதை வட்டாட்சியா்கள் உறுதிசெய்ய வேண்டும். மேலும், எரிபொருளை அதிக விலைக்கு விற்பது, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற முறைகேடுகள் நடைபெறுகிா என்பதையும் அவா்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் 3-ஆவது நாளாக விமான சேவை நிறுத்தம்:

காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடும் பனிப் பொழிவு காரணமாக, வானம் தெளிவின்றி காணப்பட்டதால், ஸ்ரீநகரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஸ்ரீநகா் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தேங்கும் பனிக்கட்டிகள் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. இருப்பினும் தொடா்ந்து பனி பெய்து கொண்டிருக்கிறது. மேலும், வானமும் தெளிவின்றி காணப்படுகிறது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஸ்ரீநகருக்கு வரும் விமானங்களும், இங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனிப்பொழிவு குறைந்த பிறகு விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கும் என்றாா் அவா்.

இதனிடையே, ஸ்ரீநகரில் புதன்கிழமை மாலை வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com