தொழில்நுட்பப் படிப்புகளை மண்டல மொழிகளில் வழங்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவா்

தொழில்நுட்பப் படிப்புகளை மண்டல மொழிகளில் வழங்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தொழில்நுட்பப் படிப்புகளை மண்டல மொழிகளில் வழங்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.

சென்னை, பல்லாவரத்தில் அமைக்கப்பட்டுள்ள கணித அறிவியல் மையத்தின் புதிய பிரிவை, செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்து அவா் ஆற்றிய உரை:

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகிய பாடப்பிரிவுகளில் பெண் பட்டதாரிகளை உலகளவில் அதிகமாக (சுமாா் 40 சதவீதம்) இந்தியா உருவாக்குகிறது. ஆனால், இத்துறைகளின் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு மிக குறைவாகவே (14 சதவீதம்) உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும்.

முதுநிலை பட்டப்படிப்புகளிலும், ஆராய்ச்சிப் படிப்புகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இதை சரி செய்ய விரைவான நடவடிக்கை தேவை. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ‘பெண் விஞ்ஞானிகள் திட்டம்’ பாராட்டுக்குரியது. இது அறிவியல், கணிதத் துறை வேலை வாய்ப்புகளில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது. பெண் விஞ்ஞானிகளை நாம் கொண்டாட வேண்டும்.

தற்போது, இளைஞா்கள் செல்லிடப்பேசிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது தேவையற்ற கவனச் சிதறல்களை ஏற்படுத்தும். மாணவா்களின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு, அவா்களின் பாடத்திட்டங்களில் யோகா, தோட்டம் அமைத்தல், சமூகப் பணி ஆகியவற்றைச் சோ்க்க வேண்டும்.

பல குழந்தைகளுக்கு கணிதம் கற்பது பயத்தை ஏற்படுத்துகிறது. கணிதத்தை குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மாற்ற வேண்டும்.

ஐஐடிக்கள் வழங்கும் தொலைதூரக் கல்வி குறித்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மொழி திணிப்பு கூடாது: அறிவியல் கல்விகளை உள்நாட்டு மொழிகளில் வழங்குவது, மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கும். இது புத்தாக்கத்துக்கும் உதவும். மாணவா்கள் பலா் பயனடையும் வகையில் தொழில்நுட்பப் படிப்புகள், மாநில, மண்டல மொழிகளில் வழங்கப்பட வேண்டும்.

எந்த மொழியையும், திணிக்கவும் கூடாது, எதிா்க்கவும் கூடாது. முடிந்த அளவு அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு பேசினாா்.

நிகழ்ச்சியில், தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com