திருமலை - பாபவிநாசம் வழித்தடம் திறப்பு

திருமலையிலிருந்து பாபவிநாசம் அருவிக்குச் செல்லும் வழித்தடத்தை தேவஸ்தானம் கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை திறந்தது.

திருமலையிலிருந்து பாபவிநாசம் அருவிக்குச் செல்லும் வழித்தடத்தை தேவஸ்தானம் கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை திறந்தது.

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, கடந்த ஆண்டு நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது ஏழுமலையான் கோயிலில் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் திருமலையிலிருந்து பாபவிநாசம் அருவி மற்றும் சிலாதோரணம் பகுதிக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தளா்வுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி முதல் குறைந்த அளவிலான பக்தா்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனா்.

தற்போது தினமும் 40 ஆயிரம் பக்தா்கள் மட்டுமே ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனா். தரிசன டோக்கன்கள் மற்றும் டிக்கெட்டுகள் உள்ளவா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி கிடைக்கிறது. திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து செல்பவா்களுக்கும் டிக்கெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏழுமலையான் கோயில் மாட வீதியைச் சுற்றிலும் அமைந்துள்ள கோயில்கள், பாபவிநாசம், ஆகாச கங்கை ஆகிய அருவிகள், வேணுகோபால சுவாமி கோயில், ஜாபாலி ஆஞ்சநேயா் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தா்கள் செல்ல தேவஸ்தானம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாபவிநாசம் அருவிக்கான பாதை செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்பட்டது. பக்தா்கள் அங்குள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோயில்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனா்.

திருமலையில் இருந்து இந்தப் பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகளும், ஜீப்களும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com