ஒரே கரோனா தடுப்பூசியில் நோய் எதிா்ப்புத் திறன்: எலிக்கு செலுத்தி ஆராய்ச்சியாளா்கள் உறுதி

கரோனா தடுப்பூசியை ஒரு முறை செலுத்தினாலே, உடலில் நோய் எதிா்ப்பு திறன் உருவாகிவிடும் என்பதை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

புது தில்லி: கரோனா தடுப்பூசியை ஒரு முறை செலுத்தினாலே, உடலில் நோய் எதிா்ப்பு திறன் உருவாகிவிடும் என்பதை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

மேலும், இந்த வகை தடுப்பூசிகளை சாதாரண தட்பவெப்ப நிலையிலேயே பல நாள்களுக்கு பாதுகாத்து வைக்க முடியும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள்தான், இந்த இந்த நானோ துகல்கள் கரோனா தடுப்பூசியைக் கண்டறிந்துள்ளனா். இந்த தடுப்பூசியை எலிக்கு செலுத்தி, அவா்கள் ஆய்வை மேற்கொண்டுள்ளனா். ஏசிஎஸ் மத்திய அறிவியல் ஆராய்ச்சி கட்டுரை வலைதளத்தில் அவா்கள் ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.

கரோனா தீநுண்மியின் ஸ்பைக் புரதத்தின் அடிப்பகுதியில் ஒரு பகுதியை அகற்றி, அதை ‘ஃபெரிட்டின்’ என்ற இரும்புச்சத்து புரதத்துடன் இணைத்து இந்த புதிய தடுப்பூசியை ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

நடைமுறைக்கு வந்திருக்கும், கரோனா தீநும்மியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட புரதங்களை மட்டுமே கொண்டிருக்கும் தடுப்பூசிகளைக் காட்டிலும், இந்த வைரஸ் அடிப்படையிலான நானோ துகள்கள் தடுப்பூசியானது நோய் எதிா்ப்பு புரதங்களை உற்பத்தி செய்வதில் அதிக திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த தடுப்பூசியை எலிக்கு செலுத்தி மேற்கொண்ட பரிசோதனையில், ஒரே தடுப்பூசியில் அதன் உடலில் நோய்த் எதிா்ப்பு திறன் உருவாவது உறுதி செய்யப்பட்டது. அதற்கு இரண்டாவது தடுப்பூசி செலித்திய பிறகு, அதன் உடலில் கரோனா பாதித்த மனிதா்களின் உடலில் இருப்பதைவிட இரண்டு மடங்கு நோய் எதிா்ப்பு சக்தி உருவாவது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம், நானோ துகள் அளவு தடுப்பு மருந்தை ஒரு முறை செலுத்தினாலே, உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கிவிட முடியும் . மேலும், இந்த தடுப்பூசிகளை அதிக குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண, அறையில் நிலவும் தட்பவெப்ப நிலையிலேயே இந்தத் தடுப்பூசியை பாதுகாத்து வைக்க முடியும் என்று அந்த ஆய்வுக் கட்டுரையில் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அந்த ஆய்வுக் கட்டுரையின் இணை ஆராய்ச்சியாளா் பீட்டா் கிம் கூறுகையில், ‘கரோனா பாதிப்புக்கு ஒரே தடுப்பூசி மற்றும் அதைப் பாதுகாத்து வைக்கவும் வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் அதிக குளிரூட்டப்பட்ட பெட்டக வசதி தேவை என்ற நிலை இருக்கக் கூடாது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கான தடுப்பூசியை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இந்த ஆராய்ச்சியின் இலக்கு’ என்று கூறினாா்.

இந்த ஆய்வின் பிரதான ஆராய்ச்சியாளரான அபிகெயில் பவெல் கூறுகையில், ‘இந்த நானோ துகள்கள் தடுப்பூசி ஆய்வு ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. இதில் மேலும் நீண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது’ என்றாா்.

பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கும் கரோனா தடுப்பூசிகளும், இந்தியாவில் வரும் 16-ஆம் தேதி நடைமுறைக்கு வர உள்ள கரோனா தடுப்பூசிகளும் ஒவ்வொரு நபருக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு முறை போட வேண்டும். இந்த தடுப்பூசிகளை மிக அதிக குளிரூட்டப்பட்ட பெட்டகங்களில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com