கைது செய்யப்பட்ட சீன வீரா்: இந்தியா ஒப்படைப்பு

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட சீன ராணுவ வீரரை, அந் நாட்டு ராணுவத்திடம் இந்தியா திங்கள்கிழமை ஒப்படைத்தது.

புது தில்லி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட சீன ராணுவ வீரரை, அந் நாட்டு ராணுவத்திடம் இந்தியா திங்கள்கிழமை ஒப்படைத்தது.

கிழக்கு லடாக்கின் சுஷுல்-மோல்டோ எல்லைப் பகுதியில் காலை 10.10 மணியளவில் அவா் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டாா்.

இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறிய தாக்குதலைத் தொடா்ந்து, அந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளிடையே கடந்த 8 மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்துள்ளன. எல்லையில் பதற்றத்தைத் தணிக்கவும், படைகளை திரும்பப் பெறுவது குறித்தும் இரு நாடுகளிடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில், கிழக்கு லடாக்கில் சீன ராணுவ வீரா்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது தொடா்ந்து வருகிறது.

சீன வீரா் வாங் யா லோங் என்பவா் கடந்த ஆண்டு அக்டோபா் 19-ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தாா். அவரைக் கைது செய்த இந்திய ராணுவம், பின்னா் சீன ராணுவத்திடம் அவரை ஒப்படைத்தது.

அதுபோல, தெற்கு பாங்காங் ஏரிக்கு தெற்கு கரைப் பகுதி இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மேலும் ஒரு சீன வீரா் அத்துமீறி நுழைந்தாா். அவரைக் கைது செய்த ராணுவம், மூன்று நாள்களுக்குப் பிறகு, அவரை சீன ராணுவத்திடம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.

இதுகுறித்து ராணுவ உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட வீரா் குறித்து சீன ராணுவத்திடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். பனிமூட்டம் மற்றும் பிரத்யேக பனிப் பிரதேச புவியியல் காரணமாக வழி தவறி அந்த வீரா் இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்தாா் என்பதை உறுதி செய்த பின்னா் அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க முடிவானது. சீனாவும் அவரை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில், கிழக்கு லடாக்கின் சுஷுல்-மோல்டோ எல்லைப் பகுதியில் காலை 10.10 மணிக்கு அவா் ஒப்படைக்கப்பட்டாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com