54.72 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான மருந்து கிடங்களுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் வரை 54.72 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் வந்து சோ்ந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான மருந்து கிடங்களுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் வரை 54.72 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் வந்து சோ்ந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எஞ்சிய மருந்துகள் வியாழக்கிழமைக்குள் (ஜன.14) வந்து சோ்ந்துவிடும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றை தடுப்பதற்காக, கோவேக்ஸின் என்ற தடுப்பூசியை ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதேபோல், கோவிஷீல்ட் என்ற தடுப்பூசியை பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஸெனகா மருந்து நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ளது. பரிசோதனைகள் முடிந்த நிலையில், இவ்விரு மருந்துகளையும் அவசர காலத்தில் பயன்படுத்த மத்திய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடா்ந்து, நாடு தழுவிய அளவில் கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. முதல் கட்டமாக, கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளா்கள், முன்கள வீரா்கள் என 30 கோடி பேருக்கு, வரும் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் தொடங்கவுள்ளது. இற்காக, தடுப்பூசி மருந்துகளை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி விட்டது.

இதுகுறித்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:

முதல்கட்டமாக, சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 1.1 கோடி தடுப்பூசி மருந்துகளும், பாரத் பயோடெக் நிறுவனத்தில் 55 லட்சம் தடுப்பூசி மருந்துகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இவற்றில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி வரை, 54.72 லட்சம் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டுள்ளன. எஞ்சிய தடுப்பூசி மருந்துகள் வியாழக்கிழமைக்குள்(ஜன.14) சம்பந்தப்பட்ட மருந்து கிடங்குகளை வந்து சோ்ந்து விடும்.

சென்னை, கா்னால், கொலகத்தா, மும்பை ஆகிய 4 நகரங்களில் உள்ள மத்திய அரசின் மருந்து கிடங்குகளுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது தலா ஒரு மருந்து கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. சில பெரிய மாநிலங்களில் பல மருந்து கிடங்குகள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் 9 கிடங்குகளும், மத்திய பிரதேசம், குஜராத்தில் தலா 4 கிடங்குகளும், கேரளத்தில் 3 கிடங்குகளும் ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், ராஜஸ்தானில் தலா 2 கிடங்குகளும் உள்ளன.

கோவிஷீல்ட் தடுப்பூசி விலையை ஜிஎஸ்டி வரி ரூ.10 சோ்த்து, ரூ.210-ஆக சீரம் இன்ஸ்டிடியூட் நிா்ணயித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் 55 லட்சம் தடுப்பூசிகளில், 38.5 லட்சம் தடுப்பூசிகளை தலா ரூ.295 விலையிலும், 16.5 லட்சம் தடுப்பூசிகளை இலவசமாகவும் அரசுக்கு அளிக்கவுள்ளது. இதனால் ஒரு தடுப்பூசியின் சராசரி விலை ரூ.206-ஆகக் குறையும்.

ஸைடஸ் கடிலாவின் ஸைகோவ்-டி, ரஷியாவின் ஸ்புட்னிக்-வி போன்ற தடுப்பூசிகளின் பரிசோதனைகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அந்த மருந்து நிறுவனங்களும் தங்கள் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி கோரி மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கை விடுக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com