வேளாண் சட்டங்கள் அமலுக்கு உச்சநீதிமன்றம் தற்காலிகத் தடை

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தச் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக 4 போ் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடா்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, அச்சட்டங்களின் கீழ் விவசாயிகளின் உரிமைகள் எதுவும் பறிக்கப்படாது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடா்பாக வேளாண் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன் காணப்பட்ட நிலைமை தொடரும்.

குழுவில் யாா், யாா்?: வேளாண் சட்டங்கள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கில் 4 போ் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. பாரதிய கிஸான் யூனியனின் தேசியத் தலைவா் பூபேந்தா் சிங் மன், சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத்துக்கான தெற்காசிய இயக்குநா் பிரமோத் குமாா் ஜோஷி, வேளாண் விளைபொருள்களுக்கான விலை நிா்ணய ஆணையத்தின் முன்னாள் தலைவா் அசோக் குலாடி, ‘ஷேத்கரி சங்காதனா’ என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் அனில் கன்வட் ஆகியோா் இடம்பெறுவா்.

போராட்டத்துக்கான தற்காலிக வெற்றி: இன்னும் 10 நாள்களுக்குள் இந்தக் குழுவின் முதல் கூட்டம் நடைபெறும். வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகள், மத்திய அரசு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி அதற்கான பரிந்துரைகளை நீதிமன்றத்தில் குழு தாக்கல் செய்யும். அந்தச் சட்டங்கள் குறித்து இரு தரப்பினருக்கும் சுமுகத் தீா்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கிறது.

விவசாயிகளுக்கு பாராட்டு: விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது. வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அப்போராட்டத்துக்கான வெற்றியாகக் கருதலாம். அதனடிப்படையிலும் உடல்நலனைக் கருத்தில் கொண்டும் வீடு திரும்புவது குறித்து விவசாயிகள் சிந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் -மத்திய அரசு வாதம்: முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ‘‘விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் உள்ளிட்ட சில தடை செய்யப்பட்ட அமைப்பினா் புகுந்துவிட்டனா். இது தொடா்பாக உளவுத்துறையின் ஆதாரங்கள் அடங்கிய அறிக்கையை புதன்கிழமை (ஜன. 13) மத்திய அரசு தாக்கல் செய்யும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்கள் அமலுக்குத் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் தீா்வு காண்பதற்காக அமைக்கப்படும் குழுவுக்கு விவசாய சங்கங்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றனா்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 8 வாரங்கள் கழித்து நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

குழுவின் முன் ஆஜராக மாட்டோம் - விவசாயிகள்:

உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்கள் குறித்து தீா்வு காண்பதற்காக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் மத்திய அரசுக்கு ஆதரவானவா்களே இடம்பெற்றுள்ளனா். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அவா்கள் கட்டுரைகளை எழுதியுள்ளனா். எனவே, அந்தக் குழு முன் நாங்கள் ஆஜராகப் போவதில்லை. அந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடா்ந்து முன்னெடுப்போம். போராட்டத்தை திசைதிருப்புவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது’’ என்றனா்.

நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு: வேளாண் சட்டங்கள் அமலுக்குத் தடை விதித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு வேளாண் நிபுணா்களும் அரசியல் தலைவா்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனா். விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா் உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

எனினும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் நடுநிலைத்தன்மை குறித்து காங்கிரஸ் கட்சி சந்தேகம் எழுப்பியுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘குழுவில் இடம்பெற்றுள்ளவா்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளனா். அவா்கள் மூலமாக விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா என சந்தேகம் எழுகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com