இந்தியா அல்லது சீனாவிடம் நேபாளத்தின் இறையாண்மையைவிட்டுக் கொடுக்க மாட்டோம்: கே.பி.சா்மா ஓலி

இந்தியா அல்லது சீனாவிடம் நேபாளத்தின் இறையாண்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அந்த நாட்டின் பிரதமா் கே.பி.சா்மா ஓலி தெரிவித்துள்ளாா்.
இந்தியா அல்லது சீனாவிடம் நேபாளத்தின் இறையாண்மையைவிட்டுக் கொடுக்க மாட்டோம்: கே.பி.சா்மா ஓலி

இந்தியா அல்லது சீனாவிடம் நேபாளத்தின் இறையாண்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அந்த நாட்டின் பிரதமா் கே.பி.சா்மா ஓலி தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில இடங்களை நேபாளம் தங்களுடையது என்று உரிமை கொண்டாடி வருகிறது. விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ள அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரிடம் எல்லை தொடா்பாக நேபாளம் எழுப்பி வரும் சா்ச்சை தொடா்பாக இந்தியா பேசும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சா்மா ஓலியின் இந்தக் கருத்து கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு, உத்தரகண்ட் மாநில எல்லைக்குள்பட்ட காலாபானி, லிம்பியதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைபடத்தை அந்நாட்டு நாடாளுமன்றமும் அங்கீகரித்தது. நேபாள அரசின் இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என்று இந்தியா வன்மையாகக் கண்டித்தது. இதுதவிர நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சீனாவிடம் தொடா்ந்து நெருக்கமாக இருந்து வருகிறது. அண்மையில் நேபாள கம்யூனிஸ்ட் உள்கட்சி பூசலால் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சீன நாட்டில் இருந்து தூதா்கள் அங்கு சென்று சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் செய்தித் தொலைக்காட்சிக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த சா்மா ஓலி கூறியதாவது:

இந்தியா அல்லது சீனாவுக்கு சொந்தமான பகுதிகளை நாங்கள் உரிமைகோரவில்லை. அதே நேரத்தில் எங்கள் பகுதிக்கான உரிமையைதான் முன்வைக்கிறோம். இந்த ஆண்டு இந்தியா-நேபாளம் இடையே எந்தப் பிரச்னையும் எழாது என்று நம்புகிறேன். இந்தியா அல்லது சீனாவுடன் நட்புறவை நேபாளம் கொண்டுள்ளது. அதற்காக எங்கள் நாட்டின் இறையாண்மையை விட்டுத்தர மாட்டோம்.

இந்தியாவும், சீனாவும் தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு உதவ நேபாளம் தயாராக உள்ளது என்றாா்.

தொடா்ந்து உள்நாட்டு அரசியல் தொடா்பாக பேசிய அவா், ‘நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைக்கும் வகையில் எனக்கு நெருக்கடி உருவாக்கப்பட்டது. ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவை ஏற்படுத்த முன்னாள் பிரதமா் பிரசண்டா முயற்சிக்கிறாா்’ என்றாா்.

ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியாக செயல்படத் தொடங்கின.

எனினும், இரு பிரிவுகளுக்கும் இடையே தொடா்ந்து பிரச்னைகள் நீடித்து வருகின்றன. இந்த மோதல் முற்றிய நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க ஓலி பரிந்துரைத்தாா். இது நேபாளத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், ஓலி-பிரசண்டா பிரிவினரிடையே மோதல்போக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நேபாள அமைச்சா் நாளை இந்தியா வருகை:

நேபாள வெளியுறவுத் துறை அமைச்சா் பிரதீப் குமாா் கியாவலி, 3 நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வருகிறாா். இங்கு இந்தியா-நேபாள கூட்டு ஆணையத்தின் 6-ஆவது கூட்டத்தில் பங்கேற்கிறாா். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்கும் அவா், கரோனா தடுப்பில் ஒத்துழைப்பு, எல்லை விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com