இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக மீள்வதைக் கண்டு உலக நாடுகள் வியப்பு

கரோனா நோய்த்தொற்றால் வீழ்ச்சி கண்ட இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதைக் கண்டு உலக நாடுகள் வியப்படைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.


ஆமதாபாத்: கரோனா நோய்த்தொற்றால் வீழ்ச்சி கண்ட இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதைக் கண்டு உலக நாடுகள் வியப்படைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

குஜராத்தின் சிலாஜ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத்தை மத்திய அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டால், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வென்று விடுவோம்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக உலகிலுள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் அந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவதைக் கண்டு மற்ற நாடுகள் வியப்படைந்துள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கடந்த 6 ஆண்டுகால ஆட்சியில் மட்டும், அதற்கு முந்தைய 20 ஆண்டுகளில் ஆட்சி புரிந்த அரசுகள் மேற்கொள்ளாத அளவுக்குக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் திட்டம், புல்லட் ரயில் திட்டம் உள்ளிட்டவற்றை பாஜக தலைமையிலான அரசு வேகமாக நிறைவேற்றி வருகிறது. ஊரக மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வங்கிக் கணக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் 10 கோடி குடும்பங்கள், தங்குவதற்கு சொந்த வீடு இல்லாமல் இருந்தன. ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கு எட்டப்படும்.

அதேபோல், அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு என்ற இலக்கும் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் எட்டப்படும். ரயில் தண்டவாளங்களை எளிதில் கடக்கும் நோக்கில் 1 லட்சத்துக்கும் அதிகமான மேம்பாலங்கள் பாஜக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளன என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com