நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்திட அதிகாரிகள் குழு அமைப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யும் நேரடி கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்திட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்திட அதிகாரிகள் குழு அமைப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யும் நேரடி கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்திட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டங்களில் தற்போது 16 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் தேவைக்கேற்ப நூற்றுக்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் அல்லாத வியாபாரிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறதா. அவ்வாறு விவசாயிகள் அல்லாத வியாபாரிகளிடமிருந்து வரும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப் படுகிறதா என்பதைக் கண்டறிந்து, அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, போதிய சாக்குகள் இருப்பு இல்லாத கொள்முதல் நிலையங்களுக்கு உடனடியாக சாக்குகள் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நிலையத்தில் 3000 சாக்குகள் இருப்பு இருந்திட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் உள்ள பணியாளர்கள், விவசாயிகளிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது தொகைப் பெறுகிறார்களா என்பதை ஆய்வு செய்திட வேண்டும். 

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உடனடியாகக் காலதாமதம் இல்லாமல் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். அவ்வாறு தாமதம் ஏற்பட்டால் உடனடியாகத் தாமதத்தைத் தவிர்த்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களிலும், கொள்முதல் பணிகள் செவ்வனே நடைபெறும் வகையில், எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 

கொள்முதல் நிலையங்களில் உள்ள தராசு, ஈரப்பதனி, நெல் தூற்றும் இயந்திரம் போன்றவைச் சரியான நிலையில் இயங்குகிறதா என ஆய்வு செய்திட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறியும் வண்ணம் நெல்லின் விலை பற்றிய விபரம் ஒட்டப்பட்டிருக்கிறதா, பதிவேடுகள் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா, கணினியில் பதிவுகள் சரியாக உள்ளதா, கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் இருப்பு சரியாக உள்ளதா, மூட்டைகளின் எடை சரியாக உள்ளதா போன்றவற்றையும், நெல்லை விற்பனைச் செய்ய வந்த விவசாயிகளிடம் குறைகள் ஏதும் இருப்பின், அந்த விவரத்தைப் பெற்று நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முன்னுரிமை மீறாமல் கிடங்குகளுக்குத்  தேக்கமின்றி நகர்வு செய்யப்படுகிறதா, நெல் மூட்டைகள் இருப்பில் இருக்கும் போது தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா, இருப்பில் உள்ள நெல் மூட்டைகள் பதிவேட்டை விடக் கூடுதலாக உள்ளதா போன்ற பல்வேறு விவரங்களை ஆய்வு செய்திட, குழுவில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

குடவாசல் வட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்திட குடவாசல் வட்டாட்சியர் ஆர்.ராஜன்பாபு, குடவாசல் தனி வட்டாட்சியர் வெ.கோபாலகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலக தனி வட்டாட்சியர் இ.பத்மினி, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளர் ஜெ.முரளிதரன் ஆகியோரும், நன்னிலம் வட்டத்திற்கு வட்டாட்சியர் பி.லட்சுமி பிரபா, தனி வட்டாட்சியர் டி.ராஜ கணேஷ், தனி வட்டாட்சியர் டி.அன்பழகன், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக கண்காணிப்பாளர் கே.நடராஜன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதென, நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com