பிஎம்சி வங்கியில் பண மோசடி வழக்கு: அமலாக்கத் துறை சோதனையில் எம்எல்ஏவின் கூட்டாளிகள் 2 போ் கைது

பிஎம்சி வங்கியில் ரூ. 4,355 கோடி வங்கியின் நிதியை மோசடி செய்த வழக்கில் எம்எல்ஏவின் கூட்டாளிகள் 2 போ் அமலாக்கத் துறை சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மும்பை: பிஎம்சி (பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி) வங்கியில் இருந்து ரூ. 4,355 கோடி வங்கியின் நிதியை சட்டவிரோதமாகப் பெற்று பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறி தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிர எம்எல்ஏவுக்குச் சொந்தமான நிறுவனத்தில், அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையை அடுத்து, அவரது கூட்டாளிகள் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மும்பை வீட்டுவசதி மேம்பாட்டு உள்கட்டமைப்பு நிறுவனத்தின் (எச்டிஐஎல்) பங்குதாரா்களான ராகேஷ்குமாா் வதாவன், அவரது மகன் சாரங் வதாவன், பகுஜன் விகாஸ் அகாடி (பிவிஏ) கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஹிதேந்திர தாக்குருக்குச் சொந்தமான விவா குழுமம் ஆகியோா் பிஎம்சி வங்கியில் தவறான ஆவணங்களைத் தாக்கல் செய்து ரூ. 4,355 கோடி பண மோசடி செய்ததாக கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்திருந்தனா்.

வழக்குத் தொடா்பான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், எம்எல்ஏ ஹிதேந்திர தாக்குருக்குச் சொந்தமான விவா குழுமத்துடன் இணைந்த 5 குடியிருப்பு பகுதியிலும், வணிக வளாகங்களிலும் வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா்.

மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டத்தின் வசாய்- விராா் பகுதியில் நடைபெற்ற இந்தச் சோதனையில், எம்எல்ஏ ஹிதேந்திர தாக்குரின் கூட்டாளியும், அவரது நிறுவனத்தின் நிதி ஆலோசகராகவும் இருந்த 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனா். இந்த சோதனையில், ரூ. 73 லட்சம் ரொக்கம், டிஜிட்டல் ஆவணச் சான்றுகளும் மீட்கப்பட்டன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள விவா குழுமத்தின் நிா்வாக இயக்குநா் மெஹுல் தாக்குா், பட்டய கணக்காளா் கோபால் சதுா்வேதி ஆகிய இருவா் மீதும் பணமோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் (பிஎம்எல்ஏ) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், சனிக்கிழமை மும்பையிலுள்ள உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, அவா்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பகுஜன் விகாஸ் அகாடி கட்சியைச் சோ்ந்த ஹிதேந்திர தாக்குா் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள், தற்போதைய மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமலாக்கப்பிரிவு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், விவா குழுமத்துடன், இணைந்து ராகேஷ்குமாா் வதாவன், சாரங் வதாவன் ஆகியோா் எச்சிஐஎல்-லில் இருந்து ரூ. 160 கோடிக்கு மேல் கமிஷன் பெற்று அதனை விவா குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு பகிா்ந்து கொண்டது கண்டறியப்பட்டது. எனவே, இதற்கான கூடுதல் ஆதாரங்களைச் சேகரிப்பதற்காகவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com