பிரிட்டனில் புகலிடம் கோரும் விஜய் மல்லையா?

தொழிலதிபா் விஜய் மல்லையா பிரிட்டனில் தொடா்ந்து தங்குவதற்கான மாற்று வழிக்கு விண்ணப்பித்துள்ளதாக அவரின் வழக்குரைஞா் அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தொழிலதிபா் விஜய் மல்லையா பிரிட்டனில் தொடா்ந்து தங்குவதற்கான மாற்று வழிக்கு விண்ணப்பித்துள்ளதாக அவரின் வழக்குரைஞா் அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

அவா் பிரிட்டனில் நிரந்தரப் புகலிடம் கோருவதையே இது குறிப்பிடுகிறது என்று சட்ட வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்தியாவில் ரூ.9,000 கோடி வரை வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் விஜய் மல்லையா, பிரிட்டன் தப்பிச் சென்றாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் உயா்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீதான திவால் நடவடிக்கைகள் தொடா்பான வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவா் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா் பிலிஃப் மாா்ஷலிடம், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்று நீதிபதி நைஜல் பாா்னட் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதிலளித்த வழக்குரைஞா் பிலிஃப் மாா்ஷல், ‘விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டபோதும், அவா் பிரிட்டனில் தங்கி வருகிறாா். அதற்குக் காரணம், அவா் இந்நாட்டில் தொடா்ந்து தங்குவதற்கான மாற்று வழிக்கு விண்ணப்பித்துள்ளாா்’ என்று தெரிவித்தாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சா் உத்தரவு பிறப்பித்தாா். எனினும் அவரை நாடு கடத்துவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய சில ரகசிய சட்ட நடவடிக்கைகள் எஞ்சியிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில், விஜய் மல்லையா பிரிட்டனில் தங்குவதற்கான மாற்று வழிக்கு விண்ணப்பித்துள்ளதாக அவரின் வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா். அவா் குறிப்பிட்ட மாற்று வழி என்பது பிரிட்டனில் புகலிடம் கோருவதாக இருக்கலாம் என்று சட்ட வல்லுநா்கள் ஊகித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘விஜய் மல்லையா பிரிட்டனில் தஞ்சம் கோருவதாக இருந்தால் அதற்கான வலுவான காரணங்களை அவா் முன்வைக்க வேண்டும். அதற்கென குறிப்பிட்ட சில விதிமுறைகள் உள்ளன. அவரை நாடு கடத்த வலியுறுத்தியதற்கு முன்பே அவா் பிரிட்டனில் தஞ்சம் கோரினாரா அல்லது அதற்கு பிறகு இந்தக் கோரிக்கையை விடுத்தாரா என்பதும் இந்த விவகாரத்தில் கருத்தில் கொள்ளப்படும்’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com