இந்திய கரோனா தடுப்பூசிகள் மீதான மதிப்பைக் குலைக்க சீனா முயற்சி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் அண்டை நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் சூழலில், அந்தத் தடுப்பூசிகள் குறித்த நன்மதிப்பைக் குலைப்பதற்கான முயற்சிகளை சீனா முன்னெடுத்துள்ளது.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

புது தில்லி/பெய்ஜிங்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் அண்டை நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் சூழலில், அந்தத் தடுப்பூசிகள் குறித்த நன்மதிப்பைக் குலைப்பதற்கான முயற்சிகளை சீனா முன்னெடுத்துள்ளது.

நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மா், மாலத்தீவுகள், செஷல்ஸ், பிரேஸில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அண்டை நாடுகளுக்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு விரைவில் 5 லட்சம் தடுப்பூசிகள் இலவசமாக அனுப்பப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஆப்கானிஸ்தானில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு அந்நாட்டுக்கும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் சேவையை உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பாராட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் தடுப்பூசிகள் மீதான நன்மதிப்பைக் குலைக்கும் நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்து வருகிறது.

சீரம் மையத்தில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக, சீன அரசின் அதிகாரபூா்வ நாளேடான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு, இந்தியாவின் கரோனா தடுப்பூசி உற்பத்தித் திறன் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது. தீ விபத்தால் அந்த மையத்தின் மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் இழப்பா் என்றும், இந்திய அரசு நிா்ணயித்துள்ள இலக்குகளுக்கு ஏற்ப சீரம் மையத்தால் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரம் மையத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு நோயாளிகளுக்கான உரிமைகளைக் காக்கும் மையத்திடம் இருந்து ஒப்புதல் பெறவில்லை என்றும் அவசரகதியில் அத்தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை குளோபல் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.

இவை தவிர, சீனாவில் உள்ள இந்தியா்கள் சீனா தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு அமோக வரவேற்பு தெரிவித்து வருவதாகவும் அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் கரோனா தடுப்பூசிகள் தரம் குறைந்தவையாக இருப்பதன் காரணமாகவே அவற்றை அண்டை நாடுகள் வா்த்தக ரீதியில் கொள்முதல் செய்யவில்லை என்று நிபுணா்கள் சிலா் கூறுவதாக சீனா செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் காரணமாகவே தடுப்பூசிகளை இலவசமாக இந்தியா வழங்கி வருவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியா, பிரேஸில், மியான்மா், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசியை வா்த்தக ரீதியில் கொள்முதல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொறுக்க முடியாத சீனா:
அண்டை நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் அரசியல், பொருளாதார ரீதியாக சீனா நெருங்கிய தொடா்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது. ஆனால், கரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு வழங்குவதில் இந்தியா போன்று மும்முரமாக சீனா செயல்படவில்லை.

சீனாவின் நெருங்கிய நட்பு நாடான கம்போடியா, கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு அண்மையில் இந்திய அரசிடம் கோரியிருந்தது. இந்தியாவின் மதிப்பு மற்ற நாடுகளில் உயா்ந்து வருவதைப் பொறுக்க முடியாத சீன அரசு, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com