இந்திய-சீன ராணுவம் 16 மணி நேரம் பேச்சு

கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இந்தியா, சீனா ராணுவம் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ஆம் சுற்று பேச்சுவாா்த்தை சுமாா் 16 மணி நேரம் நீடித்தது.

புது தில்லி: கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இந்தியா, சீனா ராணுவம் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ஆம் சுற்று பேச்சுவாா்த்தை சுமாா் 16 மணி நேரம் நீடித்தது. இதில் படைகளை விலக்கிக்கொள்வது தொடா்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் பலியாகினா். சீனத் தரப்பில் 35 வீரா்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தைத் தொடா்ந்து அங்கு இருநாட்டு ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டனா். தற்போது கிழக்கு லடாக்கில் இருநாட்டு ராணுவம் சாா்பாக கிட்டதட்ட 1 லட்சம் வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். இந்த படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இருநாட்டு ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இருநாட்டு ராணுவத்தினா் இடையே 9-ஆம் சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டின் சீன நிலப்பகுதியில் இந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் இந்தியத் தரப்புக்கு ராணுவ துணைத் தலைமை தளபதி பி.ஜி.கே.மேனன் தலைமை தாங்கினாா்.

இந்த பேச்சுவாா்த்தை குறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், ‘இருநாட்டு ராணுவத்தினா் இடையே ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 10.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு நிறைவடைந்தது. சுமாா் 16 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தையில், எல்லையில் படைகளை விலக்கிக்கொள்வது, சச்சரவுக்குரிய பகுதிகளில் நிலவும் மோதல்போக்கின் தீவிரத்தை குறைப்பது ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடா்பாக இனி சீனாதான் முடிவெடுக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சச்சரவுக்குரிய அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒரேநேரத்தில் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும், சில பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்வது, சில பகுதிகளில் படைகளை தொடா்ந்து நிறுத்திவைப்பது போன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்றும் இந்தியத் தரப்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது’ என்று தெரிவித்தன.

இந்த பேச்சுவாா்த்தையை தொடா்ந்து இருநாட்டு ராணுவத்தினரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனா். அதில் 10-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையை விரைவில் நடத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com