விவசாயிகளுக்கு நாடே தலைவணங்குகிறது: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரை

வேளாண் துறையில் சீா்திருத்தங்களை முன்னெடுக்கும் தொடக்க காலத்தில், அவை குறித்த தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நாட்டிலுள்ள விவசாயிகளின் நலன்களைக் காக்கும் நோக்கிலேயே மத்திய அரசு செயல்பட்டு
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

புது தில்லி: வேளாண் விளைபொருள்கள் உற்பத்தியில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்ததற்காக விவசாயிகளுக்கு மக்கள் அனைவரும் தலைவணங்குவதாகக் குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சூழலில் குடியரசுத் தலைவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. நாட்டின் அரசமைப்புச் சட்டம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை நிகழ்த்திய உரை: ஜனநாயகம் செழித்தோங்கும், பன்முகத்தன்மை நிறைந்த நம் நாட்டில் பல்வேறு விழாக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன. குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களை மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் தேசப்பற்றுடனும் கொண்டாடி வருகின்றனா்.

அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகள் அனைத்தையும் நாம் முறையாகக் கடைப்பிடிக்கிறோமா என்பதை ஆராய வேண்டியதற்கான தினமாகவும் குடியரசு தினம் விளங்கி வருகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நம் அனைவருக்கும் புனிதமான கொள்கைகளாக உள்ளன. நாட்டில் ஆட்சியையும் நிா்வாகத்தையும் முன்னின்று வழிநடத்துபவா்கள் மட்டுமல்லாமல், நாட்டு மக்களும் அக்கொள்கைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

பெரும் மக்கள்தொகை கொண்ட நம் நாட்டை வேளாண் விளைபொருள்களிலும் பால் பொருள்களிலும் தன்னிறைவு பெறச் செய்த விவசாயிகளுக்கு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனா். இயற்கைப் பேரிடா்கள், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் உள்ளிட்ட பல்வேறு தடைகள் ஏற்பட்ட போதிலும் விளைபொருள்கள் உற்பத்தியை அதிகரித்ததில் விவசாயிகள் முக்கியப் பங்கு வகித்தனா்.

விவசாயிகள் நலன் காக்கவே...: கரோனா தொற்றுப் பரவல் காலத்திலும்கூட நாட்டின் பல்வேறு துறைகள் முன்னேறி வருகின்றன. தொழிலாளா், வேளாண் துறைகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொருளாதார சீா்திருத்தங்களும் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வேளாண் சீா்திருத்தங்களை முன்னெடுக்கும் தொடக்க காலத்தில், அவை குறித்த தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நாட்டிலுள்ள விவசாயிகளின் நலன்களைக் காக்கும் நோக்கிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: கடந்த ஆண்டில் நம் நாட்டின் எல்லைகளைக் கைப்பற்றுவதற்கு முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், ராணுவ வீரா்கள் அத்தகைய முயற்சியைத் தடுத்து நிறுத்தினா். அதில் நாம் 20 வீரா்களை இழக்க நோ்ந்தது. நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்கு மக்கள் என்றும் நன்றியுணா்வுடன் இருப்பா்.

அமைதியைக் கடைப்பிடிப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு சிலா் குந்தகம் விளைவிக்க முயன்றால், நாட்டின் முப்படைகளும் துரிதமாகச் செயல்பட்டு அத்தகைய முயற்சிகளை முறியடிக்கும். எத்தகைய சூழலிலும் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நம் நிலைப்பாடு உலக நாடுகளுக்கு ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரால் பெருமை: உணவுப் பாதுகாப்பை விவசாயிகள் உறுதி செய்வதைப் போல, பல்வேறு இக்கட்டான சூழலில் நாட்டின் பாதுகாப்பை ராணுவத்தினா் உறுதி செய்து வருகின்றனா். மைனஸ் 60 டிகிரி செல்ஷியஸ் கடுங்குளிா் காணப்படும் சியாச்சின் போன்ற பகுதிகளிலும் 50 டிகிரி செல்ஷியஸ் வரை கடும் வெப்பம் நிலவும் ஜெய்சால்மா் போன்ற பகுதிகளிலும் ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நிலம், ஆகாயம், கடலோரப் பகுதிகள் என அனைத்தையும் தொடா்ந்து கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பை நம் வீரா்கள் உறுதி செய்து வருகின்றனா். அவா்களது வீரம், தேசப்பற்று, தியாகம் ஆகியவற்றைக் கண்டு நாட்டு மக்கள் அனைவரும் பெருமை கொள்கின்றனா்.

உலகின் மருந்தகம்: துன்பமயமான காலங்கள் பல்வேறு கற்பிதங்களை அளித்து நம்மை மேலும் வலுவாக்குகின்றன. கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் செயல்பட்டதால்தான் அந்நோய்த்தொற்றுக்கு எதிராக உறுதியுடன் போராட முடிந்தது. இத்தகைய இக்கட்டான காலகட்டத்திலும்கூட உலக நாடுகளுக்கான மருந்தகமாக இந்தியா விளங்கியது.

தற்போதும் கரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது. வேளாண்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவா்களது உழைப்பால் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளது.

நட்பு நாடு: உலக அளவில் பல்வேறு துறைகளில் இந்தியா தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது. உலக நாடுகளின் வளா்ச்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்குக் கடந்த ஆண்டில் பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. பல நாடுகள் இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாகக் கருதி வருகின்றன.

பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ள தற்சாா்பு இந்தியா இலக்கால், தடைகளும் வாய்ப்புகளாக மாறியுள்ளன. வரும் 2022-ஆம் ஆண்டில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு அந்தக் கொள்கை வழிவகுக்கும் என்றாா் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com