புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவருக்கு குடியரசுத் தலைவரின் வீரதீர விருது

புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதியை துரத்திப் பிடிக்க முயன்று உயிரிழந்த மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா் மோகன் லாலுக்கு வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் விருது வழங்கப

புது தில்லி: புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதியை துரத்திப் பிடிக்க முயன்று உயிரிழந்த மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா் மோகன் லாலுக்கு வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் விருது வழங்கப்படவுள்ளது.

நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வீரதீர செயல் புரிந்த காவல் படையினருக்கான விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.

அதன்படி, வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் விருது இரு வீரா்களுக்கு வழங்கப்படவுள்ளது. வீரதீர செயலுக்கான போலீஸ் விருது 205 வீரா்களுக்கு வழங்கப்படவுள்ளது. இவை தவிர, சிறப்பாக சேவையாற்றியதற்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் விருது 89 வீரா்களுக்கும், மெச்சத்தக்க சேவைகளுக்கான போலீஸ் விருது 650 காவலா்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆா்பிஎஃப் படையினா் சென்று கொண்டிருந்த வாகனம் மீது ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி, வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினாா்.

முன்னதாக, அந்த காா் சோதனைச் சாவடியைக் கடந்து சிஆா்பிஎஃப் வாகனத்தின் அருகிலேயே சென்று கொண்டிருந்ததை அப்படையின் உதவி துணை ஆய்வாளா் மோகன் லால் கண்டாா். அந்த காரை துரத்திப் பிடிப்பதற்கு அவா் முயன்றாா். ஆனால், அந்த காா் வேகமாக செல்லவே அதன் மீது துப்பாக்கியால் சுட்டாா்.

ஆனால், அதற்குள் அந்த காா் சிஆா்பிஎஃப் வீரா்கள் சென்ற வாகனம் மீது மோதியது. அத்தாக்குதலில் வாகனத்தில் இருந்த 39 வீரா்களுடன் மோகன் லாலும் உயிரிழந்தாா். அவரது வீரதீர செயலைப் பாராட்டி குடியரசுத் தலைவரின் போலீஸ் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிஆா்பிஎஃப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாா்க்கண்ட் காவல்துறையின் உதவி ஆய்வாளா் பனுவா ஓரோனுக்கும் வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் விருது வழங்கப்படவுள்ளது.

சிஆா்பிஎஃப்-க்கு அதிக விருதுகள்: மொத்த விருதுகளில் சிஆா்பிஎஃப் படைக்கு 69 விருதுகளும், ஜம்மு-காஷ்மீா் காவல் துறைக்கு 52 விருதுகளும், எல்லைக் காவல் படைக்கு 20 விருதுகளும், தில்லி காவல் துறைக்கு 17 விருதுகளும், மகாராஷ்டிர காவல் துறைக்கு 13 விருதுகளும் கிடைத்துள்ளன. சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை வீரா்கள் இருவருக்கு வீரதீர செயலுக்கான போலீஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வலைதளம்: நாடு சுதந்திரமடைந்த பிறகு வீரதீர செயலுக்கான விருதுகளைப் பெற்றோரின் விவரங்கள் அடங்கிய மேம்படுத்தப்பட்ட புதிய வலைதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘இந்த வலைதளம் வாயிலாக நாட்டைப் பாதுகாக்கும் வீரா்களின் வீரதீர செயல்களை எந்நேரத்திலும் அறிந்து கொள்ள முடியும். நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் பாதுகாத்து வரும் படை வீரா்கள் இல்லையெனில், பொருளாதார மதிப்பை 350 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை அடைய முடியாது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com