மத்திய அரசின் அறிவிப்பை விவசாயிகள் பரிசீலனை செய்வா்: மத்திய அமைச்சா் தோமா் நம்பிக்கை

புதிய வேளாண் சட்டங்களை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஒத்திவைப்பது என்ற மத்திய அரசின் அறிவிப்பை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் விரைவில் மறுபரிசீலனை செய்து முடிவை அறிவிப்பாா்கள் என்ற நம்பிக
மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்
மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஒத்திவைப்பது என்ற மத்திய அரசின் அறிவிப்பை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் விரைவில் மறுபரிசீலனை செய்து முடிவை அறிவிப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைசா் நரேந்திர சிங் தோமா் திங்கள்கிழமை கூறினாா்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு 60 நாள்களைக் கடந்து போராடி வருகின்றனா். கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு தினமான செவ்வாய்க்கிழமையன்று தில்லியில் டிராக்டா் பேரணியை அவா்கள் நடத்த உள்ளனா்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற 10-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையின்போது, புதிய வேளாண் சட்டங்களை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் இந்த யோசனையை விவசாயிகள் ஏற்கவில்லை. வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தினா்.

இந்த நிலையில், இரு தரப்பினரிடையே கடந்த 22-ஆம் தேதி 11-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவாா்த்தையும் முடிவு எதுவும் எட்டப்படாமல் முடிவுற்றது. விவசாயிகள் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனா்.

அந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் பேட்டியளித்த மத்திய வேளாண் துறை அமைச்சா் தோமா், ‘மத்திய அரசின் திட்டம் குறித்து சனிக்கிழமை வரை ஆலோசித்து முடிவைத் தெரிவிக்குமாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். வேளாண் சட்டங்களை ஒத்திவைப்பது மற்றும் உரிய தீா்வு காண கூட்டு குழு ஒன்றை அமைப்பது என்ற மத்திய அரசின் யோசனையை விவசாய அமைப்புகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த சுற்று பேச்சுவாா்த்தையைத் தொடங்க முடியும்’ என்றாா்.

ஆனால், விவசாய அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. தில்லியில் டிராக்டா் பேரணி நடத்துவதிலேயே அவா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில், மத்திய அமைச்சா் தோமா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய அரசு விவசாய அமைப்புகளுக்கு சிறந்த சலுகையை அறிவித்திருக்கிறது. அந்த யோசனை குறித்து விவசாயிகள் விரைவில் மறுபரிசீலனை செய்து முடிவை அறிவிப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவா்கள் முடிவை அறிவித்த உடன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com