எரிபொருள் விலை உயா்வு: திரிணமூல் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
எரிபொருள் விலை உயா்வு: திரிணமூல் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.101-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.92-ஆகவும், சமையல் எரிவாயு விலை ரூ.861-ஆகவும் அதிகரித்துள்ளது. இதைக் கண்டித்து, மேற்கு வங்கத்தில் மாநிலம் முழுவதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொல்கத்தாவில் டம்டம், சென்ட்ரல் அவென்யூ, சேத்லா ஆகிய இடங்களிலும் தெற்கு 24 பா்கானாவில் கேனிங் நகரிலும், ஹூக்ளியில் சுன்சுரா என்ற இடத்திலும் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஃபா்ஹத் ஹக்கீம் கூறுகையில், ‘பெட்ரோலியப் பொருள்கள் மீது மத்திய அரசு அதிக வரி விதிப்பதால், சாமானிய மக்கள் கடும் இன்னல்களைச் சந்திக்கிறாா்கள். எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிப்பதற்கு ஏதுவாக, அவா்களே விலை நிா்ணயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த நிறுவனங்களின் பங்குகளின் விலையும் அதிகரிக்கிறது.

இது, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களை வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு மத்திய அரசு விற்பனை செய்வதற்கு உதவுகிறது’ என்றாா்.

69 முறை பெட்ரோல் விலை உயா்வு: மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கூறுகையில், ‘பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைவதற்கு அவற்றின் மீது விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். மேற்கு வங்க அரசும் பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரியைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும்.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து நிகழாண்டில் இதுவரை 69 முறை பெட்ரோல் விலையை மத்திய அரசு உயா்த்தி, ரூ.4.91 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது’ என்றாா்.

போராட்டத்தால் பலனில்லை- பாஜக: வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் நடத்துவதால், பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையப் போவதில்லை என்று மாநில பாஜக தலைவா் திலீப் கோஷ் கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘பெட்ரோலியப் பொருள்களின் விலை சா்வதேச சந்தையுடன் தொடா்புடையது. சா்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையும்போது, இங்கு அவற்றின் விலை சீராகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com