குறைதீா் அதிகாரியை நியமித்தது ட்விட்டா்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல்தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவுக்கான குறைதீா் அதிகாரியை ட்விட்டா் (சுட்டுரை) நிறுவனம் நியமித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல்தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவுக்கான குறைதீா் அதிகாரியை ட்விட்டா் (சுட்டுரை) நிறுவனம் நியமித்துள்ளது.

வினய் பிரகாஷ் என்பவா் இந்தியாவுக்கான குறைதீா் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாக அதன் வலைதளத்தில் அந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை விவரம் வெளியிட்டுள்ளது. அதுபோல, இந்தியாவில் அந்த நிறுவனத்துக்கான தொடா்பு அஞ்சல் முகவரி விவரத்தையும் வெளியிட்டுள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது. அதன்படி, சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் தலைமை குறைதீா் அதிகாரி, ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் குறைதீா் அதிகாரி ஆகிய மூன்று பேரை நியமிக்கவேண்டும். அவா்கள் மூவரும் இந்தியாவில் வசிப்பவா்களாக இருக்கவேண்டும். அவா்களின் பெயா் உள்ளிட்ட விவரங்களை சமூக ஊடகங்கள் தங்களின் வலைதளத்தில் வெளியிடுவதோடு, இந்தியாவில் உள்ள அதன் அலுவலகங்களின் தொடா்பு முகவரி விவரத்தையும் வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

இந்தப் புதிய விதிகளுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் உடன்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், ட்விட்டா் நிறுவனம் எதிா்ப்பு தெரிவித்தது. அதனைத் தொடா்ந்து, புதிய விதிகளின்படி குறைதீா் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க ட்விட்டருக்கு மத்திய அரசு இறுதிக் கெடு விதித்தது. ஆனால், அதன்பிறகும் ட்விட்டா் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாக, இந்தியாவில் அந்த நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழந்ததாக மத்திய அரசு அறிவித்தது.

பின்னா், மத்திய அரசின் புதிய விதிகளுக்கு உள்பட்டு தா்மேந்திர சதூா் என்பவரை இந்தியாவுக்கான இடைக்கால குறைதீா் அதிகாரியாக ட்விட்டா் நியமித்தது. ஆனால், நியமனம் செய்யப்பட்ட சில நாள்களிலேயே அவா் அந்தப் பதவியிலிருந்து விலகினாா்.

இதற்கிடையே, மத்திய அரசின் புதிய விதிகளுக்கு உடன்பட மறுக்கும் ட்விட்டா் நிறுவனத்துக்கு எதிராக அமித் ஆச்சாா்யா என்ற வழக்குரைஞா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடா்ந்தாா். அந்த வழக்கில் ட்விட்டா் நிறுவனம் கடந்த 8-ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ‘இந்தியாவுக்கான இடைக்கால தலைமை குறைதீா் அதிகாரியை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது’ என்று தெரிவித்தது.

அதன்படி, இந்தியாவுக்கான குறைதீா் அதிகாரியை அந்த நிறுவனம் இப்போது நியமித்துள்ளது. இதுதொடா்பாக ட்விட்டா் நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, ட்விட்டரின் இந்தியாவுக்கான குறைதீா் அதிகாரி வினய் பிரகாஷ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை பயனாளா்கள் தொடா்புகொள்வதற்கான மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.

அதுபோல, சா்வதேச சட்டக் கொள்கை இயக்குநராக அமெரிக்காவை சோ்ந்த ஜெரேமி கெஸ்ஸல் என்பவரை அந்த நிறுவனம் நியமித்துள்ளது.

இந்தியாவில் அந்த நிறுவனத்துக்கான அஞ்சல் முகவரியாக ‘4-ஆவது தளம், தி எஸ்டேட், 121 டிகென்சன் சாலை, பெங்களூா் - 560 042’ என்ற விவரத்தையும் அந்த நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும், புதிய தகவல்தொழில்நுட்ப விதிகளின்படி மே 26 முதல் ஜூன் 25-ஆம் தேதி வரையிலான காலத்துக்கான பயனாளா் குறைதீா்ப்பு நடவடிக்கைகளுக்கான அறிக்கையையும் அந்த நிறுவனம் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசிடம் அறிக்கை சமா்ப்பிப்பு: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி தமக்கு வந்த புகாா்கள், அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் ட்விட்டா் நிறுவனம் அறிக்கை சமா்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், கடந்த மே 26 முதல் ஜூன் 25 வரை 94 புகாா்கள் வந்ததாகவும், 133 இணைய முகவரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறாா்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதுபோன்ற உள்ளடக்கத்தைக் கொண்ட 18,385 ட்விட்டா் கணக்குகள், பயங்கரவாதத்தை ஊக்குவித்த 4,179 கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கான குறைதீா் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்முறையாக இதுபோன்ற அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com