ஜூன் 21 முதல் கரோனா தடுப்பூசி திட்டத்தில் தொய்வுநிலை

புதிய கரோனா தடுப்பூசி கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் தினசரி செலுத்தப்படும் தடுப்பூசிகளின் சராசரி எண்ணிக்கை குறைந்துவருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதிய கரோனா தடுப்பூசி கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் தினசரி செலுத்தப்படும் தடுப்பூசிகளின் சராசரி எண்ணிக்கை குறைந்துவருகிறது.

நாட்டில் உள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கடந்த மாதம் 21-ஆம் தேதிமுதல் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்னா், 18 முதல் 44 வயதுக்குள்பட்டவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அக்கொள்கையை மாற்றியமைத்து, அனைவருக்கும் மத்திய அரசே இலவசமாகத் தடுப்பூசி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய கொள்கை தொடங்கப்பட்ட பிறகு, கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் சராசரி எண்ணிக்கை குறைந்து வருவது அரசு வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் 21-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதி வரை தினமும் சராசரியாக 61.14 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டதாக கோவின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரையிலான காலத்தில் 41.92 லட்சமாகக் குறைந்துள்ளது.

ஜூலை 5-ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரையிலான காலத்தில் செலுத்தப்பட்ட சராசரி தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 34.32 லட்சமாக குறைந்துள்ளது. ஹரியாணா, ஆந்திரம், கா்நாடகம், குஜராத், சத்தீஸ்கா், அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் செலுத்தப்படும் கரோனா தடுப்பூசி டோஸ்களின் சராசரி எண்ணிக்கை கடந்த ஜூன் 21-ஆம் தேதிமுதல் குறைந்துள்ளது.

கேரளம், அந்தமான்-நிகோபா் தீவுகள், தாத்ரா-நகா் ஹவேலி, ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் சராசரி எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

37.73 கோடி டோஸ்கள்: நாட்டில் திங்கள்கிழமை நிலவரப்படி, 37.73 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிா்வாகங்கள், தனியாா் மருத்துவமனைகள் ஆகியவற்றிடம் இன்னும் 1.54 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு தினமும் சராசரியாக 80 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டுமென மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். ஆனால், தினசரி சராசரி எண்ணிக்கை இன்னும் 50 லட்சத்துக்குக் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com