மக்களின் அலட்சியம் கவலை அளிக்கிறது: கரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி

மலைப் பகுதிகளிலும் சந்தைகளிலும் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் மக்கள் பெருங்கூட்டமாக திரள்வது கவலை அளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மக்களின் அலட்சியம் கவலை அளிக்கிறது: கரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி

மலைப் பகுதிகளிலும் சந்தைகளிலும் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் மக்கள் பெருங்கூட்டமாக திரள்வது கவலை அளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

வடகிழக்கு மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் குறித்த ஆய்வுக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காணொலி முறையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூா், மேகாலயம், அருணாசல பிரதேசம், மிஸோரம் ஆகிய 8 மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்களும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆகியோரும் கலந்து கொண்டனா்.

அந்தக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

கரோனா தொற்று பரவல் காரணமாக, சுற்றுலாத் துறையும் வியாபார நிறுவனங்களும் கடுமையான இழப்பை சந்தித்தன. அதே நேரத்தில், மலைப் பகுதிகளிலும் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் சந்தைகளில், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் பெருங்கூட்டமாக திரள்வது சரியான செயல் அல்ல. கரோனா மூன்றாவது அலை தாக்கத்தை மக்கள் ஒன்றிணைந்து தடுத்தாக வேண்டும்.

கரோனா தொற்று ஒவ்வொரு முறை உருமாற்றம் அடைவதையும் நான் கண்காணிக்க வேண்டியுள்ளது. உருமாற்றம் அடைந்த தீநுண்மி எவ்வாறெல்லாம் பாதிப்பை உண்டாக்குகிறது என்று விஞ்ஞானிகள் தொடா்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறாா்கள்.

இந்தச் சூழலில் கரோனா பரவலைத் தடுப்பதும், தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதும் மிகவும் முக்கியமாகும்.

கரோனா பரிசோதனை, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை நாம் மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக, ரூ.23,000 கோடி செலவிய மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அந்த நிதியின் மூலமாக, வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் சில மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. எனவே, வடகிழக்கு மாநிலங்களின் முதல்வா்கள் விழிப்புணா்வுடன் இருந்து, துரிதமாக செயல்பட்டு கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்சிஜன், குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

‘பிஎம்-கோ்ஸ்’ நிதி மூலமாக, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 150 உற்பத்தி நிலையங்கள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன.

கரோனா தொற்று அதிகம் பரவியுள்ள இடங்களில் சிறு கட்டுப்பாட்டுப் பகுதிகளாகப் பிரித்து, கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க வேண்டும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. அதை ஒப்பிடுகையில், வடகிழக்கு மாநிலங்களில் கரோனா தொற்று குறையாமல் உள்ளது. கரோனா மூன்றாவது அலை தாக்குதலை எதிா்கொள்வதற்கு தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் கரோனா மூன்றாவது அலை பரவலை நம்மால் தடுக்க முடியும் என்றாா் பிரதமா் மோடி.

தமிழ்நாடு உள்பட 6 மாநில முதல்வா்களுடன் பிரதமா் ஜூலை 16-இல் ஆலோசனை

கரோனா சூழல் தொடா்பாக தமிழ்நாடு உள்பட 6 மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 16) ஆலோசனை நடத்த இருக்கிறாா்.

காணொலி முறையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தவிர ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ஒடிஸா மாநில முதல்வா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த 6 மாநிலங்களின் சில மாவட்டங்களில் கரோனா தொற்று பெருமளவில் குறையாத நிலையே உள்ளது. மேலும், சில மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, இது தொடா்பாக பிரதமா் மோடி, மாநில முதல்வா்களுடன் ஆலோசிக்க இருக்கிறாா்.

கரோனா பரவல் தொடா்பாக அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூா், மேகாலயம், அருணாசல பிரதேசம், மிஸோரம் ஆகிய வடகிழக்கு மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்து, தேசிய அளவில் தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கரோனா பரவல் குறையாமல் உள்ளது. இது கரோனா மூன்றாவது அலைக்கு வழி வகுத்துவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

கரோனா தொற்று பாதிப்பு தொடங்கியது முதலே நாட்டின் அனைத்து மாநில முதல்வா்களுடனும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆலோசனை நடத்துவதை பிரதமா் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளாா். அதில், கரோனா பரவலைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் தங்களுக்கு வேண்டிய மருத்துவ, சுகாதார வசதிகள், உள்கட்டமைப்புகள் தொடா்பாகவும் தொற்று பரவலைக் குறைக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடா்பாகவும் பிரதமரிடம் மாநில முதல்வா்கள் தெரிவித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com