ஸ்டேன் சுவாமியின் மருத்துவ ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மகாராஷ்டிர அரசு

பாதிரியாரும், பழங்குடியின சமூக ஆர்வலருமான மறைந்த ஸ்டேன் சுவாமியின் (84) மருத்துவ ஆவணங்களை மகாராஷ்டிர அரசு, மும்பை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. 
ஸ்டேன் சுவாமியின் மருத்துவ ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மகாராஷ்டிர அரசு

பாதிரியாரும், பழங்குடியின சமூக ஆர்வலருமான மறைந்த ஸ்டேன் சுவாமியின் (84) மருத்துவ ஆவணங்களை மகாராஷ்டிர அரசு, மும்பை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
 எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் ஸ்டேன் சுவாமியை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் கைது செய்தது. இந்த வழக்கு, மகாராஷ்டிர மாநிலம் புணேயில் கடந்த 2017 டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது தொடர்புடையதாகும். இக்கூட்டம் நடந்த மறுநாள் புணே புறநகர் பகுதியில் கோரேகான் பீமா பகுதியில் வன்முறை வெடித்தது.
 மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
 இவ்வழக்கில் ஸ்டேன் சுவாமியை என்ஐஏ கைது செய்து விசாரித்தபோதிலும் அவரை ஒருபோதும் விசாரணைக்காக காவலில் எடுக்கவில்லை. கைதைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர் பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டிருந்ததால் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 மருத்துவக் காரணங்களுக்காக அவரை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு அவரது வழக்குரைஞர் மிஹிர் தேசாய், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 இதனிடையே, ஸ்டேன் சுவாமி கடந்த 5-ஆம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது வழக்குரைஞர் மிஹிர் தேசாய், மும்பை நீதிமன்றத்தில் கூறுகையில் "என்ஐஏ அமைப்பு மற்றும் மகாராஷ்டிர சிறை நிர்வாகம் ஆகியவற்றின் அலட்சியம் காரணமாகவே ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார். அவருக்கு உரிய நேரத்தில் போதிய மருத்துவ உதவியை அளிக்கத் தவறிவிட்டனர்' என்று தெரிவித்திருந்தார்.
 சுவாமியின் மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு அவர் உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
 அதை ஏற்று மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தலோஜா சிறை நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 இந்நிலையில், ஸ்டேன் சுவாமி, தலோஜா சிறைக்கு கொண்டுவரப்பட்டது முதல், அவர் இறந்த பின் நடைபெற்ற பிரேத பரிசோதனை வரையிலான மருத்துவ ஆவணங்களை 300 பக்க ஆவணங்களை தலோஜா சிறை நிர்வாகம் மும்பை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
 இது தவிர, ஸ்டேன் சுவாமி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த மும்பை ஹோலி ஃபேமிலி மருத்துவமனையும் அவரது மருத்துவ ஆவணங்களையும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களையும் சமர்ப்பித்தது.
 நீதிமன்றக் காவலில் ஸ்டேன் சுவாமி உயிரிழந்ததால், அவரது மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com