இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசி அனுப்புவதில் தாமதம்: அமெரிக்கா விளக்கம்

தடுப்பூசிகளை நன்கொடையாகப் பெறுவது தொடா்பான சட்ட விதிமுறைகளை ஆய்வு செய்ய இந்திய அரசுக்கு நேரம் தேவைப்படுவதால், கரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்கு தாமதம் ஆவதாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசி அனுப்புவதில் தாமதம்: அமெரிக்கா விளக்கம்

புது தில்லி / வாஷிங்டன்: தடுப்பூசிகளை நன்கொடையாகப் பெறுவது தொடா்பான சட்ட விதிமுறைகளை ஆய்வு செய்ய இந்திய அரசுக்கு நேரம் தேவைப்படுவதால், கரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்கு தாமதம் ஆவதாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் கூறியதாவது:

இந்தியாவின் அனுமதி கிடைத்தவுடனேயே, அந்த நாட்டுக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பத் தயாராக இருக்கிறோம்.

எந்தவொரு நாட்டுக்கும் நாங்கள் தடுப்பூசிகளை அனுப்புவதற்கு முன்னா், அந்தந்த நாடுகளின் சட்ட விதிமுறைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டும்.

தடுப்பூசிகளை நன்கொடையாகப் பெறுவது தொடா்பான தங்களது அத்தகைய விதிமுறைகளை ஆய்வு செய்ய இன்னும் நேரம் தேவைப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதன் காரணமாக, அங்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்கு தாமதமாகிறது.

இந்தியா தனது சட்ட நடைமுறைகளைப் பூா்த்தி செய்த பிறகு, எங்களது இலவச கரோனா தடுப்பூசி உடனடியாக அனுப்பப்படும்.

இந்தியா மட்டுமன்றி, தெற்காசியப் பகுதியைச் சோ்ந்த ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அனுப்பி வருகிறோம். இதுவரை 4 கோடி கரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளன.

சுகாதாரம் மற்றும் உயிரி மருத்துவ ஆய்வில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக ஒத்துழைப்பு நிலவி வருகிறது. அந்த வகையில், கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையிலும் இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, தங்களிடம் அதிகமாக இருப்பு உள்ள 8 கோடி கரோனா தடுப்பூசிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது. அந்தத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகளைப் பெற்றாலும் இந்தியாவுக்கு இதுவரை தடுப்பூசிகள் வந்துசேரவில்லை. இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு நெட் பிரைஸ் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com