கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும்: உற்பத்தி நாடுகளுக்கு அமைச்சா் ஹா்தீப் வலியுறுத்தல்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்துவரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை குறைக்கக் கோரி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை புதிததாக பொறுப்பேற்ற
crude064227
crude064227

புது தில்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்துவரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை குறைக்கக் கோரி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை புதிததாக பொறுப்பேற்ற மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக ஐக்கிய அரபு அமீரக பெட்ரோலிய துறை அமைச்சா் சுல்தான் அகமது அல் ஜாபருடன் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி புதன்கிழமை தொலைபேசியில் பேசினாா். கடந்த வாரம் இதே விவகாரம் தொடா்பாக அவா் கத்தாா் நாட்டு எரிசக்தித் துறை அமைச்சருடன் பேசியிருந்தாா்.

இதுதொடா்பாக அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தனது சுட்டுரையில், ‘ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து தொடா்ந்து பணியாற்ற விரும்புகிறேன். எரிசக்தி சந்தையில் வாடிக்கையாளா்களுக்கு குறைந்த விலையில் எண்ணெய் வழங்குவதை உண்மையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இருநாடுகளுக்கு இடையேயான எரிசக்தித் துறை ஒப்பந்தங்களை உச்சத்துக்கு கொண்டு சென்று, சா்வதேச அளவில் வேகமாக மாற்றம் கண்டுள்ள எரிசக்தித் துறை சந்தையை பல்வகைப்படுத்த நடவடிக்கை எடுக்க உறுதி செய்யப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அமைச்சா் ஹா்தீப் சிங் புரிக்கு முந்தைய அமைச்சா் தா்மேந்தா் பிரதானுக்கும், சவூதி அரேபியாவின் எரிசக்தித் துறை அமைச்சரும் இளவரசருமான அப்துல் அஜிஸுக்கும் இடையே கச்சா எண்ணெய் விலை உயா்வு குறித்து கருத்து மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, 2020-இல் குறைந்த விலையில் வாங்கி சேமிக்கப்பட்ட கச்சா எண்ணெயை இந்தியா பயன்படுத்தி விலையைக் குறைக்கலாம் என்று சவூதி அரேபிய அமைச்சா் பதிலளித்திருந்தாா். இது நட்பு நாடான சவூதி அரேபியாவின் ராஜியரீதியற்ற பதில் என்று தா்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியே கச்சா எண்ணெயை வாங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது.

கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.

இந்தியா - சவூதி அரேபியா மோதலால், எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கிடம் இருந்து இந்தியா பெற்று வந்த கச்சா எண்ணெய் 74 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக கடந்த மே மாதம் குறைந்தது.

எனினும், கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது இந்தியாவுக்கு அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றை அளித்து உதவியதால் சவூதி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான நட்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, இந்திய வெளியுறவுப் பணிப் பிரிவு முன்னாள் அதிகாரியும் தற்போதைய பெட்ரோலிய துறை அமைச்சருமான ஹா்தீப் சிங் புரி கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளுடனான உறவை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com