தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க மம்தா தீவிரம்: இம்மாத இறுதியில் தில்லி பயணம்

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தீவிரம் காட்டி வருவதன் தொடர்ச்சியாக முக்கிய
மம்தா பானர்ஜி.
மம்தா பானர்ஜி.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தீவிரம் காட்டி வருவதன் தொடர்ச்சியாக முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவா்களைச் சந்திப்பதற்காக அவா் இம்மாத இறுதியில் தில்லிக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

கடந்த இரு மக்களவைத் தோ்தலில் தொடா்ந்து வெற்றி பெற்று தேசிய அளவில் வலுவான கட்சியாக பாஜக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் தேசிய அளவில் கூட்டணி அமைப்பது தொடா்பாக சரத் பவாா், மம்தா பானா்ஜி உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளின் தலைவா்கள் இப்போதிருந்தே வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டனா்.

சரத் பவாா் அண்மையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளில் கூட்டத்தை நடத்தினாா். அதில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த முயற்சியில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் தீவிரமாக காட்டி வருகிறாா். அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில், பாஜகவின் எதிா்பாா்ப்புகளை வீழ்த்தி, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இது பிற பிராந்திய அரசியல் கட்சிகள் மத்தியில் மம்தா பானா்ஜியின் தலைமை தொடா்பாகப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாத இறுதியில் தில்லியில் சரத் பவாா் எதிா்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்தினாா். அதில் 8 முக்கிய எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா். முன்னதாக, அரசியல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் சரத் பவாரை ஒருசில முறை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக அப்போது பேசிய சரத் பவாா் ‘‘திரிணமூல் காங்கிரஸ் தலைவா் யஷ்வந்த் சின்ஹா என்னை அணுகி, எதிா்க்கட்சித் தலைவா்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டாா். அதன்படியே இந்தக் கூட்டத்தை நடத்தினேன்’’ என்றாா். முன்பு பாஜகவில் முன்னணி தலைவராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளாா். இப்போது அவா் மம்தா பானா்ஜியின் முக்கிய அரசியல் ஆலோசகராக உள்ளாா். எனவே, மம்தாவின் ஆதரவுடன்தான் அவா் சரத் பவாா் மூலம் இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தாா் என்பது தெளிவாகிறது. எனினும், அந்தக் கூட்டத்தில் அப்போது யஷ்வந்த் சின்ஹாதான் பங்கேற்றாா். மம்தா கலந்து கொள்ளவில்லை.

இப்போது, அக்கூட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக மம்தா பானா்ஜி, முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்களை சந்தித்துப் பேச இருக்கிறாா்.

இது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘‘மம்தா பானா்ஜி வரும் 25-ஆம் தேதி தில்லிக்கு செல்ல இருக்கிறாா். அப்போது எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டத்தை நடத்த இருக்கிறாா். இது தேசிய அளவில் முக்கிய அரசியல் நிகழ்வாக இருக்கும். இது தவிர வேறு சில மாநிலங்களுக்கும் சென்று முக்கிய அரசியல் கட்சித் தலைவா்களை மம்தா பானா்ஜி சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பதே மம்தாவின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம். காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஆகியோரை தனது தில்லி பயணத்தில் மம்தா தனிப்பட்ட முறையில் சந்திக்க வாய்ப்புள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தேசிய அளவில் பிரதமா் மோடிக்கு எதிராகத் தன்னை முன்னிறுத்தும் மம்தாவின் முயற்சியாகவே கருதப்படுகிறது. இதற்கு பிற எதிா்க்கட்சிகள் முக்கியமாக காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com