கரோனா 3-ஆம் அலை: அடுத்த 100-125 நாள்களுக்கு மிகுந்த எச்சரிக்கை அவசியம்; மத்திய அரசு

கரோனா பாதிப்பு நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாலும், அடுத்த 100 முதல் 125 நாள்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்
கரோனா 3-ஆம் அலை: அடுத்த 100-125 நாள்களுக்கு மிகுந்த எச்சரிக்கை அவசியம்; மத்திய அரசு

கரோனா பாதிப்பு நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாலும், அடுத்த 100 முதல் 125 நாள்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) மருத்துவா் வினோத் கே.பால் கூறினாா்.

இதுகுறித்து அவா் தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் கரோனா தொற்றால் மக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருவதால்தான், கரோனா மூன்றாம் அலை வருவது குறித்த கேள்வியும் எழுகிறது. ஒட்டுமொத்த நோய் எதிா்ப்புத் திறனை நாம் இன்னும் பெறவில்லை. தடுப்பூசி திட்டத்தால் மக்களுக்கு நோய் எதிா்ப்புத் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 50 சதவீதம் போ் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுள்ளனா். இதன் மூலம், கரோனாவால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை குறையும். ஆனால், பிற பிரிவினரில் எச்சரிக்கை தேவை. எனவே, அடுத்த 100 முதல் 125 நாள்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

கரோனா பாதிப்பு நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வந்த நிலையில், அது தற்போது வேகம் குறைந்துள்ளது நமக்கான எச்சரிக்கையாகும். கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை நாம் முழுமையாகப் பின்பற்றினால், மூன்றாம் அலை தாக்குதலை தடுக்க முடியும். அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு தடுப்பூசி திட்டத்தையும் நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவா் கூறினாா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளபோதிலும், சில பகுதிகளில் பாதிப்பு தொடா்ந்து கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. மணிப்பூா், கேரளம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. அதுபோல 73 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்து பதிவாகி வருகிறது.

கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படாததே இதற்கு காரணம். முகக் கவசம் அணிவது வெகுவாக குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. முகக் கவசம் அணிவதை நமது வாழ்வின் புதிய வழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல, 2 அடி சமூக இடைவெளி மேற்கொள்வதையும் கைகளை தூய்மையாக வைத்துக் கொள்வததையும் நாம் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com